ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி
திருக்கோவில் சிறுவாபுரி
தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி பகுதியில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற கோவில் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும்.
சென்னையிலிருந்து சுமார் 30-40 கிமீ தொலைவில் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் இந்த கோவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம்.
இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. சிறுவர்கள் (லவ, குசா, பால முருகன்) வந்த இந்த இடம் சிறுவாபுரி (சிறுவர்கள் புரி) என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள பிற சன்னதிகள், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், ஆதி விநாயகர், நாகர், பைரவர், முனீஸ்வரர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்தியாக திருமணக் கோலத்தில் உள்ள வள்ளி -முருகன், நான்கு கரங்களுடன் ஆதி முருகப் பெருமான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியவை .
முருகனைத் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகாலத்தில் இம்முருகனும் மரகதக்கல்லாலேயே வடிக்கப்பட்டிருந்தார் எனவும், பிற்காலத்தில் வேறு சிலை நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.
சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன் இடக்கரம் இடுப்பிலும் பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.
இந்தத் தலத்தில், 1981-ம் ஆண்டு சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் ‘வள்ளி மணவாளப் பெருமான்’ எனும் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள்.
இங்குள்ள உயரமான கொடிமரம் முன் காணப்படும் பச்சை மரகத மயிலின் காட்சி அழகு. இது போன்ற சிறந்த வடிவமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது. அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார்.
சிறுவாபுரி தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை.
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. மகாமண்டபத்தில் பச்சை மரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம்.
ராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு, கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால், காட்டிற்கு அனுப்பி விட்டார். அங்கு தான் லவனும்,குசனும் பிறந்தனர். வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் லவனும் குசனும் வளர்ந்தார்கள்.
இதன் பிறகு ராமபிரான் அஸ்வமேதயாகம் செய்தார். மனைவியின்றி யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால், அவர் பல நாடுகளுக்கு யாக குதிரையை அனுப்பினார். ஒருநாள் ராமபிரானின் குதிரை லவனும் குசனும் இருந்த காட்டிற்கு வந்தது. லவனும் குசனும் அந்த குதிரையை கட்டிப்போட்டு விட்டனர்.
குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர லட்சுமணனை அனுப்பினார் ராமபிரான். லட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை. இதனால் ராமரே, நேரில் குதிரையை மீட்டு வர சென்றார். ராமபிரானிடம் லவனும், குசனும் சண்டை போட்டதாகவும், அந்த இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்றும் இத்தல வரலாறு கூறுகிறது. சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.
இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையை துண்டித்தார். அப்போதும் இவர் முருகன் சிந்தனையில் இருந்ததை அறிந்த முருகன், அம்மையாருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார்.
இதனால் இவரது கை ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு திரும்பியது. சென்னைக்கு மிக அருகிலேயே சிறுவாபுரி இருக்கிறது.
சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை அபிஷேகம் மிக சிறப்பு. செவ்வாய்க்கிழமை சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது.
வள்ளியை திருமணம் செய்த முருகன் இங்கே வந்ததால், நீண்ட காலமாகத் திருமணம் தடைப்பட்டு வருபவர்கள் . வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள் தொடர்ந்து ஆறு செவ்வாய் கிழமை வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.
பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாகும்.
மனதில் திருமணக்காட்சி கனவாய் படிந்தாலும், செவ்வாய், நாக தோஷம், பணத்தட்டுப்பாடு, இன்னும் பல பிரச்சினைகளால் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் சிறுவாபுரியிலுள்ள முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் திருமணம் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வரலாம்.
சிறுவாபுரி வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடத்துகின்றனர்.
இத்திருத்தலத்தில் தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, திருக்கார்த்திகை திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் தங்கள் கோரிக்கை நிறைவேறியவுடன் முருகனுக்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர்.
மேலும் சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.