
பூணூல் அறுப்பு போராட்டத்தை நடத்துவோம் என பேசிய இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீமை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகர பொதுச்செயலாளர் மேகநாதன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 21ம் தேதி புகார் மனு கொடுத்தார்.
அதில், தனது முகநூல் பக்கத்தில் வந்த கட்டுரைப்பதிவில் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம், காஞ்சி சங்கர மடத்தில் இருந்து பூணூலை அறுக்கும் போராட்டத்தை தொடங்குவோம் என கூறியுள்ளார்.
இப்பதிவு இஸ்லாமிய மக்களின் மனதில் வன்மத்தை விதைத்து மத ரீதியான கலவரத்தை உருவாக்கும் வகையிலும், நாட்டின் இறையாண்மைக்கு தீங்கிழைக்கும் வகையிலும் உள்ளது. அவரது பதிவை கருத்தில் கொண்டு தடா ரஹீம் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து இந்திய தேசிய லீக் கட்சியை தடை செய்யவேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், இருபிரிவினரிடையே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு பேசின் பிரிட்ஜ் பகுதியில் இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீமை கைது செய்தனர்.
இதனிடையே, தென் பாரத இந்து மகா சபை தலைவர் வீரவசந்தகுமார் கடந்த 21ம்தேதி கொடுத்த மற்றொரு புகாரின் அடிப்படையிலும், தமிழ்நாடு பிராமணர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் தடா ரஹீம் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தடா ரஹீமிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.