ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழா விமரிசையாக கொண்டப்படுவது சிறப்பு வாய்ந்த விழாவாகும்.
ராமேஸ்வரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 8-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக மேலத்தெருவில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவு 8 மணிக்கு மண்டகப்படியில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்ற பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தனர்.
விழாவின் 9-ம் நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை சுவாமி, அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8.40 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.இதையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ஸ்படிக பூஜையும், கால பூஜைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து ராமநாத சுவாமி பிரியா விடையுடனும் -பர்வதவர்த்தினி அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கீழ ரத வீதியில் உள்ள அமைக்கப்பட்டிருந்த மரத்தேருக்கு வருகை தந்தனர்.
அங்கு கோயில் மூத்த குருக்களால் சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் தீபாராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராமநாதசுவாமி பிரியா விடையுடன் பெரிய தேரிலும், பர்வத வர்த்தினி அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் சிவகோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு ரத வீதிகளல் உலா வந்தது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். பிற்பகல் தேர் நிலையை வந்தடைந்தது. இன்று இரவு 9 மணிக்கு மேல் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
10 நாள் திருவிழாவில் நாளை மாசி அமாவாசையை முன்னிட்டு மாசி திங்கள் மறைநிலா காலை 9.10 மணிக்கு சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். பிற்பகல் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளுகிறார்கள். நாளை மறுநாள் மார்ச் 3-ந் தேதி விழாவில் இரவு 7 மணிக்கு பிச்சாடனர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிலையில் மாசி மகாசிவராத்திரியான இன்று ராமேஸ்வரம் கோவில் பகல் மற்றும் இரவு முழுவதும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.மகா சிவராத்திரியான இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலும் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது.


