ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் ரம்மியமான சூழ்நிலையும், குளுமையான சீதோஷ்ண நிலையும் நிலவி வருவதால் கோடை வெயிலுக்கு சுற்றுலா பயணிகள் இன்று அதிகளவில் வந்திருந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இவர்கள் ஏற்காட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் பொழுதை களித்தனர்.
ஏற்காட்டில் மழையின்றி வறண்ட வானிலை இருந்தபோதும், குளிர்ந்த சூழல் நிலவியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தோட்டக்கலைத்துறை பூங்காக்கள், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயிண்ட் உள்ளிட்ட காட்சி முனைப்பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறுகையில், தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்கிறது.
ஆனால் இங்கு இதமான வெயில், குளிர்ச்சியான காற்று, பசுமையான சூழல் என அனைத்தும் மனதை மகிழ்விக்கும் வகையில் உள்ளது” என்றனர்.





