ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஆவணி மாதப்பிறப்பு கேரளத்தில் மலையாள புத்தாண்டாக கொண்டாடப்படுவதால் புத்தாண்டில் ஐயனை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.



பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை சிறப்பு பெற்றவை. இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறும். ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபமேற்றி வைத்தார்.
நாளை புதன்கிழமை முதல் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடைபெறும். இதே போல் லட்சார்ச்சனையும் தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. 21-ந் தேதி வரை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்றவையும் நடைபெறுகின்றன. 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
இன்று இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி வைபவத்திற்கு தலைமை தந்திரியாக பொறுப்பேற்கும் கண்டரருராஜீவரு சன்னிதானம் வந்தடைந்து தந்திரி யாக பொறுப்பேற்றார்.அடுத்த ஒரு ஆண்டு சபரிமலை தந்திரி யாக செயல்படுவார்.அவருக்கு சபரிமலை மேல் சாந்தி ,கீழ் சாந்தி மற்றும் மாளிகைபுரம் மேல் சாந்தி வரவேற்று ஆசிர்வாதம் பெற்றனர்




