
மக்களின் 8ஆண்டு கால சட்ட போராட்டம் வெற்றி – அமைதி நிலவ அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

திருப்பூர் மாநகர் வெங்கடேஷ்வரா மகாலட்சுமி நகர் மக்கள் தங்கள் பகுதியில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்டி வேறுபகுதி முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டதன் பேரில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி இது சட்டவிரோதமான தொழுகைக் கூடம், இங்கே தொழுகை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அதனை மதிக்கவில்லை.
2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு விசாரணையில் 2016 ஆம் ஆண்டு அந்தக் கட்டிடம் எதற்காக அனுமதி பெறப்பட்டதோ அதற்காகத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் தொழுகை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆனால் மாண்புமிகு நீதி மன்றத்தின் உத்தரவை அவர்கள் மதிக்கவில்லை.
மீண்டும் அந்த மக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்கள். கடந்த 6 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடந்து விசாரணை நடைபெற்றது. பல்வேறு காலகட்டத்தை கடந்து இன்று (9.11.22) இனிமேல் அங்கு சட்டவிரோதமாக தொழுகை நடத்த மாட்டோம் என்றும் அரசிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகு தொழுகை நடத்துவோம் என்று முஸ்லிம்கள் தரப்பில் அபிடவிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தொழுகையை நிறுத்த வேண்டும் என்றும், அதை மீறி தொழுகையை நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருக்கின்றார்கள்.
8 ஆண்டு காலம் அந்த மக்களினுடைய வேதனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்த பகுதியில் பல்வேறு இடையூறுகள், மிரட்டல்கள் இதற்கு இடையில் அந்த மக்கள் போராட்டத்திற்கு சட்ட ரீதியான வெற்றி கிடைத்துள்ளது.
மீண்டும் அந்த பகுதியில் பதட்டம் ஏற்படாமல் அங்கு இருக்கிற மக்கள் அமைதியாக சுமூகமாக வாழ்வதற்கும், சட்ட விரோத தொழுகை கூடம் அமையாமலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த பகுதியில் அமைதியை அரசு உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கின்றது.