
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை புயலாக உருமாறுகிறது. ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால், சென்னை உள்பட வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு, மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு நிபுணர் முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் கூறியபோது, தென் கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (depression) வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக (deep depression) மாறி, இன்று 07.12.2022 காலை இந்திய நேரப்படி 0530 மணிக்கு சென்னைக்கு சுமார் 830 கிமீ தென் கிழக்கே/இலங்கை திரிகோணமலைக்கு சுமார் 710 கிமீ கிழக்கே மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து இன்று மாலைக்குள் புயலாக மாறும். இதற்கு “மாண்டுஸ்” என்ற பெயர் இடப்படும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08.12.2022 காலை 1000 மணி முதல் தமிழக, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது கிடைக்கும் கணினி வழிகாட்டுதல்கள் படி இந்த “மாண்டுஸ்” புயல் 09.12.2022 இரவு அல்லது 10.12.2022 அதிகாலை சற்றே வலுவிழந்து ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் கரையைக் கடக்கக்கூடும்… என்றார்.
புயல் எச்சரிக்கை குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, நேற்று மாலை வலுப்பெற்றது. வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த மண்டலம், மேற்கு மற்றும் வடமேற்கில், தமிழக கடற்பகுதியை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.
இது இன்று புயலாக மாறுகிறது. ‘மாண்டஸ்’ என்ற பெயரிலான இந்தப் புயல், தமிழக வடக்கு கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரத்தை, நாளை காலை நெருங்கும். புயலின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து, இன்று அறிவிக்கப்படும்.இன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று, வானம் மேக மூட்டமாகக் காணப்படும். அதிகபட்சம் 30 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
வடக்கு கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், நாளை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நாளை மிக கன மழை பெய்யும்.
ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
வரும் 9ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், மிக அதிக கன மழை பெய்யும்.
சில இடங்களில், அதிகன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், கனமழை பெய்யும்.
வரும், 10ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை : தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடலோரத்தில், இன்றும், நாளையும், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். பின், காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, அதிகபட்சம், 80 கி.மீ., வேகம் வரை வீச வாய்ப்புள்ளது. மீனவர்களைப் பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், இலங்கையின் வடக்கு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு, இன்று முதல் 10ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
இதனிடையே, புயல் எச்சரிக்கையை குறிப்பிட்டு, ‘கனமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அக்.,29 முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதுவரை, 36.6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை காட்டிலும்,3 சதவீதம் குறைவு. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது புயலாக வலுவடைந்து, நாளை காலை தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளை வந்தடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் கன மழை மற்றும் மிக கன மழை பொழிவு ஏற்படும். இதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ள 532 படகுகள் பாதுகாப்பாக உள்ளன.
கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள 93 மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களுக்கு தொலைதொடர்பு சாதனங்கள் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கரை திரும்ப உள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் தமிழக பேரிடர் மீட்புப் படையின்10 குழுக்கள், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.
சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் நீரை வெளியேற்ற 805 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகள், தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அணைகள் மற்றும் நீர் தேக்கங்களின் நீர் இருப்பு, நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. உபரி நீர் வெளியேற்றும்போது, பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பை வழங்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அளவிலான அவசர கால செயல்பாட்டு மையங்கள் 24 மணிநேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது – என்று குறிப்பிட்டுள்ளார்.