
திராவிட மாடல் ஆட்சியின் சமூகநீதி , சமய நல்லிணக்கம் இதுதானா? என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி திருக்கோவில் தேரோட்டம் தொடர்ந்து சமூக பிரச்சினையாக இருப்பதற்கு திராவிட அரசியல் தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. கடந்த இரண்டாண்டுகளாக பிரச்சினை இன்னமும் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
இரு சமூகங்களிடையே பிரச்சினை எனக்கூறி அதிகாரிகளை கொண்டு கோவில்களை இழுத்து மூடுவதான் தீர்வா..?
பள்ளிகளில் தான் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தெரியாமல் பழக வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகளில் மாணவர்கள் சீருடை அணியும் திட்டம் உள்ளது . ஆனால் அங்கேயும் மத அடையாளமான ஹிஜாப் சலுகை தந்து அதனையும் சீர்குலைத்தது திராவிட மாடல் ஆட்சி.
அதைவிட கொடுமை மனித மலத்தை குடிநீர் தொட்டியில் கலப்பது, பள்ளிக்கூட சுவர்களில்மற்றும் பூட்டில் கூட மலத்தை பூசுவது தொடர்கதையாக இருக்கிறது.
இது எவ்வளவு அநாகரிகமான செயல்? மக்கள் பிரச்சினையை திசைதிருப்ப நடத்தும் நாடகம் இது என்றே மக்கள் பேசுகின்றனர்.
அரசு எல்லோருக்குமானது என்ற நிலையில் செயல்பட வேண்டும். சமுதாய மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட அதிகாரிகளை செயல்பட வைக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் சமூக அக்கறையுடன் அனைத்து சமூகத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பதிலாக கோவிலை இழுத்து மூடுவதில் தான் அதிகாரத்தை காண்பிக்கிறார்கள்.
கண்டதேவி தேரோட்டம் பிரச்சினை ஏற்பட்டபோது இது குறித்து கவலை தெரிவித்து தீர்வுக்கு அரசுடன் இந்து முன்னணி துணை நிற்கும் என்று இந்து முன்னனி நிறுவனர் வீரத்துறவி ஐயா இராம கோபாலன் அவர்கள் தெரிவித்தார்.
இந்து சமுதாயத்தில் ஒற்றுமை ஒருமைப்பாடு ஏற்பட இந்து முன்னணி தொடர்ந்து பாடுபடும் என உறுதியளிக்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கண்டதேவி தேரோட்டம் பற்றி கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறது.
மாநில அரசால் நடத்த முடியவில்லை என்றால் துணை ராணுவப்படையை வைத்து நடத்திக் காட்டவா என்று நீதிபதி கூறியிருப்பதற்கு திராவிட மாடல் வெட்கித் தலைகுனிய வேண்டும்.. .
ஆனால் திராவிட மாடல் தமிழக அரசு நீதிமன்றத்தின் கருத்துக்களை சிறிதும் மதிப்பதில்லை. உதாரணமாக ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவை மதிக்காமல் உச்ச நீதிமன்றம் சென்று உள்ளது.
இந்த வழக்கில் வாதாட ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கோடிக்கணக்கில் பணம் வாங்கும் வழக்கறிஞர் கபில்சிபில் அவர்களை வைத்து வாதாடுகிறது. அந்தளவு சிக்கலான வழக்கா இது? இதுபோல் நீதிமன்றத்தின் கருத்தை தமிழக அரசு அலட்சியம் செய்து வருவது விரும்பத்தகாத செயல்.
தேரோட்டம் என்பது சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்தும் பெருவிழா என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
திருத்தேரினை அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக சேர்ந்து வடம் பிடித்து இழுத்திடும் போது , மக்களின் ஒற்றுமையின் சக்தியைக் கண்டு இறைவன் மகிழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். எனவே ஒவ்வொரு ஊரிலும் தேரோட்டம் நடைபெற வேண்டும். அதனால் வெவ்வேறு சமுதாய மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டு ஒற்றுமையின் சக்தி வெளிப்பட வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு கண்டதேவி தேரோட்டமானது நடைபெற அரசும் மக்களும் ஒத்துழைத்து இறைவனின் அருளை பெற இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.