
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த பிரசாத ஸ்டால் அகற்றம். குத்தகைதாரர் தீக்குளிக்க முயற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரத்தைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் மகன் ராமர் (வயது 45) என்பவர் பிரசாத ஸ்டால் அமைக்க கோவிலில் ஏலம் மூலம் குத்தகை எடுத்து நடத்தி வருகிறார்.
இவர் கோவில் கொடிமரம் அருகே பிரசாத் ஸ்டால் நடத்தி வருவதாக கோவில் நிர்வாகம் அவரிடம் தற்பொழுது இருக்கும் இடம் பக்தர்களுக்கு இடையூறாகவும் சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் அமர்ந்து வழிபட்டுச் செல்லக்கூடிய இடமாக இருப்பதால் கோவிலுக்கு வெளியே புற காவல் நிலையத்திற்கு பக்கம் பிரசாத ஸ்டாலினை அமைத்துக் கொள்ளும் படி சில நாட்களாக கூறியுள்ளது.
ராமர் இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து வழக்கம் போல் கொடிமரம் அருகே பிரசாத ஸ்டாலினை வைத்து பிரசாதங்களை விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் கோவில் செயலர் அலுவலர் முத்துராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ராமரின் பிரசாத ஸ்டாலின் தற்பொழுது நடத்துமிடத்திலிருந்து பிரசாத ஸ்டாலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்க்கு அகற்றி போலீஸ் புற காவல் நிலையம் அருகே அமைப்பதற்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருந்தார்.
அதன்படி நேற்று (6ந்தேதி) காலை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று ராமரிடம் கோவில் நிர்வாகத்தின் கோரிக்கையின்படி பிரசாத் ஸ்டாலினை நீங்களாக எடுத்து புறக்காவல் நிலையம் அருகே கொண்டு சென்று விடுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு ராமர் மறுக்கவே உடனடியாக ஆண்டாள் கோவில் பணியாளர்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் ராமரின் பிரசாத ஸ்டாலின் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து அவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்தனர்.
அப்பொழுது ராமர் தரப்பினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராமர் கோவில் தரப்பினரை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்பொழுது திடீரென கைக்கலப்பு ஏற்பட்டது. இதில் கோவில் ஊழியர் கர்ணன் என்பவர் கீழே தள்ளிவிடப்பட்டு மயக்கம் அடைந்தார். இதனை தொடர்ந்து பெரும் பதற்றம் ஏற்படவே, ராமர், அவருடைய தங்கை, மற்றொரு சிறுமி ஆகிய மூன்று பேரும் கோவிலுக்கு வெளியே வந்து, தங்கள் உடலில் நெய்யை ஊற்றி, தீ வைத்துக்கொள்ள முயன்றனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து அவர்கள் மேலே தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். தொடர்ந்து உள்ளே சென்ற ராமர் அங்கு கோரிக்கை வலியுறுத்தி கோசமிட்டார். போலீசார் அவரை பேசி வெளி அனுப்பி விட்டனர்.
இச்சம்பவம் சுமார் ஒரு மணி நேரம் கோயில் வளாகத்துக்குள்ளே நடை பெற்றது இதனால் கோயில் வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது