அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் 30 ஆம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 30 காலை 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதி கொட்டி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திருவிழாவான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி வரும் 28-ம் தேதி மதுரைக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். வழியில் பல மண்டகப்படிகளில் தங்கி அவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
28-ம் தேதி தங்கப் பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் வருகிறார். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன் பிறகு கள்ளழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார். மறுநாள் 29-ம் தேதி காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனமாகி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வீதியுலா செல்லும் கள்ளழகர் 30-ம் தேதி திங்கட்கிழமை காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அதன் பிறகு வண்டியூர் பெருமாள் கோவிலுக்கு செல்லும் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன் பிறகு ராஜாங்க திருக்கோலத்தில் 2-ம் தேதியும், 3-ம் தேதி பூப்பல்லக்கிலும் காட்சி தரும் கள்ளழகர் அங்கிருந்து அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.
4-ம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு செல்ல 5-ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த வருடம் சுமார் 435 மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருள்கிறார்.