சேலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை. நினைவூட்டுக் கடிதமும் அனுப்பியுள்ளோம். பதலில்லை.
இருந்தாலும் உச்ச நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் மத்திய அரசு இதற்கு ஒரு தீர்வுகாணவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு வழங்கியது. 6 வார காலத்திற்கு பிறகும் அதை நிறைவேற்றவில்லை.எனவே உடனடியாக நாம் சீராய்வு மனுவை தாக்கல் செய்தோம். அதன் அடிப்படையிலே நீதிமன்றம் வருகிற மே மாதம் 3–ந் தேதிக்குள் மத்திய அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு வழங்கியுள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன் என்றார்.