மூத்த தலைவர்களிடையே பதவிப் போட்டி தமிழக காங்கிரஸில் நிலவுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் இன்று நடந்தது.
தொண்டர்கள் மத்தியில் இளங்கோவன் பேசியதாவது:
”தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் புது உற்சாகம் பெற்றுள்ளனர். இங்கு நடக்கும் கூட்டத்தை ஒரு வருடத்துக்கு முன்பு கூட்டியிருந்தால், இவ்வளவு பேர் வந்திருப்பார்களா? காங்கிரஸ் தொண்டர்கள் உண்மையாக உழைக்கின்றனர். ஆனால், தலைவர்களிடையே பதவிப் போட்டி நடக்கிறது. நான் எம்.பி.யாக இருந்தபோது பைகளை நிரப்பாமல், மக்கள் மனதை மட்டுமே நிரப்பினேன்” என்றார்.
தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு, எச்.வசந்தகுமார், டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்து இளங்கோவன் மீது புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தலைவர்களிடையே பதவிப் போட்டி நடப்பதாக இளங்கோவன் பேசியது, காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக தலைவர்கள் ராகுல் காந்தியை சந்தித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று இளங்கோவன் கூறினார். நடைபெற்ற கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செயலாளர் திருநாவுக்காரசர், மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் என்.ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



