எச்சரிக்கை செய்திகள் எதற்காக?

 

ஈக்காட்டுத்தாங்கல் – இக்காட்டில் தங்கல் என்பதன் மருவு என்று ஒரு முறை கூறியிருந்தேன். அவ்வாறு காட்டில் தங்கல் என்பதாக ஆகிவிட்டதோ எனும்படி அடையாற்றின் கரையோரம் ஆகிவிட்டிருந்தது.

அலுவலகம் சென்று வெள்ள நீரின் ஆக்ரோஷத்தால் சந்தித்த இழப்புகளைப் பார்த்து மனம் வருந்தியபடியே அடுத்துள்ள குடியிருப்புகளுக்குச் சென்று பார்த்தேன். காசி திரையரங்கு தொடங்கி இடதுபுறம் ராமாபுரம் நோக்கிச் செல்லும் ஒரு நீண்ட சிறு சாலைக்கும் அடையாற்றுக்கும் இடையே எத்தனை குறுக்குச் சாலைகள்! எல்லா வீடுகளின் தரைத் தளங்களிலும் கரை கடந்த ஆற்று நீர் தஞ்சம் புகுந்திருந்தது. குடிசைகள், மாடிக் கட்டடங்கள், பலசரக்குக் கடைகள், பெட்டிக் கடைகள் எல்லாம்தான்!

ஒவ்வொரு வீட்டின் முன்னும் பொத்திப் பொத்திப் பாதுகாத்த ஷோபா, பெட், தலையணைகள், துணிமணிகள் என… எல்லாம் குப்பைகளாய்க் குவிந்திருந்தன. ஆற்று நீர் சேற்றையும் சாக்கடையையும் சேர்த்து அங்கே தள்ளியிருந்ததால்… துர்நாற்றம், சகதி.

வீடுகள் பலவும் பூட்டப்பட்டிருந்தன. பலர் வெளியூர்களுக்குச் சென்றிருந்தார்கள். தெருக்கள் பலவும் வெறிச்சோடிக் கிடந்தன.

சென்னையில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் எம்ப்டன் குண்டு போடப்போகிறார்கள் என்று வதந்தி பரவி, ஒட்டுமொத்த சென்னையே அச்சத்தால் வெளியேறியதைப் போன்ற நிலைமை இது!

காரணத்தை அங்கிருந்த பெண்மணிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது புரிந்துகொண்டேன்.

டிசம்பர் 2 வெள்ளம் வந்துள்ளது. மறுநாள் மாலை ஓரளவு வடிந்துள்ளது. சிலர் தங்கள் வீட்டின் விலையுயர்ந்த பொருள்களை மேல்மாடிகளில் அங்கும் இங்கும் வைத்து எடுத்து ஏதோ பாதுகாத்து வந்துள்ளனர்.

திடீரென 4ம் தேதி ஒரு பெண்மணி நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு… தெருவின் முனையில் இருந்து தெரு முழுக்க ஓடி வந்திருக்கிறார். செம்பரம்பாக்கம் ஏரி உடைஞ்சிடுச்சாம்.. நாம எல்லாரும் செத்தோம். வீட்டின் ஒரு கல்லு கூட மிஞ்சாது. எல்லாம் அடிச்சிட்டு போகப்போவுது… ஐயோ அம்மா என்று குய்யோமுறையோ என கத்திக் கொண்டு சென்றுள்ளார். அந்தக் கூக்குரல் அங்கிருந்தவர்களின் ஈரக்குலையை பதம்பார்த்து நெஞ்சத்தில் திகிலூட்டியுள்ளது. அடுத்த நிமிடமே எல்லாரும் அடித்துப் புரண்டு ராமாவரம் செல்லும் மேடான அந்த சாலைக்கு ஓடியுள்ளனர். அங்கே ஏற்கெனவே ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடி நின்று அலறிக் கொண்டிருந்தனராம்.

இந்த சந்தடி சாக்கில் திருட்டு கும்பல் ஒன்று வீடுகளுக்குள் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கியதாம். இதை கவனித்து விட்ட இளைஞர்கள் சிலரின் விரட்டலில் நிலைமை ஒருவாறு சரியாகியுள்ளது.

இதே போன்ற கலவர நிலவரம் சைதாப்பேட்டையிலும் நடந்துள்ளது. திருட்டு கும்பல் கட்டி விட்ட கதை, ஏதோ எச்சரிக்கை மணி அடிப்பது போல் பரப்பப் பட்டுள்ளது..

அது ஜாபர்கான்பேட்டை! கரண்ட் இல்லை, தண்ணி இல்லை, குளித்து 5 நாளாச்சு, போன் இல்லை, ஒரே சகதி. துர்நாற்றம். கொசுக்கடி, யாருமே வந்து பாக்கல தம்பி. ஏதோ புள்ளைங்க போய் சாப்பாடு பெட்ஷீட்டு வாங்கிட்டு வருதுங்க… என்று என்னைக் கண்டதும் புலம்பினார் ஒரு பெண்மணி. அங்கங்கே ராணுவ வீரர்கள், போலீஸார், மாநகராட்சியினர், தொண்டு செய்யும் இளைஞர்கள் என… வண்டிகளில் சாப்பாடு, குடிநீர், பிஸ்கட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தனர். நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டது ஓரிரு இடங்களில். குப்பைகளை அகற்ற சேலம், ஈரோடு என மற்ற மாநகராட்சி வண்டிகள் பேனர்கட்டி அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தன. ஏ.டி.எம்.களில் வரிசை நீண்டிருந்தது.

வீடுகளை பலர் தாற்காலிகமாக பூட்டிக் கொண்டு காலி செய்துவிட்டிருக்கிறார்கள். இருப்பினும் சிலர் வேறு வழியின்றி மேல் மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கே.கே.நகர் செல்லும் சாலையில் முக்குக்கு முக்கு மட்டுமல்ல… வீட்டுக்கு வீடு குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன. மூட்டை மூட்டையாய் அரிசி, பருப்பு, கோதுமை… பல இடங்களில் அவை சாலையில் சிதறிக் கிடந்ததைப் பார்த்தபோது மனம் வலித்தது.

எத்தனை எச்சரிக்கை அறிவிப்புகள்! வானிலை ஆய்வு மையம் அலறிக் கொண்டிருந்தும், முன் எச்சரிக்கையாய் இருப்பதில் கோட்டை விட்டுவிட்டோம்.