சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முற்றுகை போராட்டம் நடத்திய ஜனநாயக மாதர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தி 55 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
டாஸ்மாக் மதுக்கடை கடையின் அருகே பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. எனவே, இந்த மதுக்கடையை அகற்றக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை.
எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் டாஸ்மாக் கடை அருகே திரண்டனர்.
அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜோதிலட்சுமி உள்பட நிர்வாகிகள் பலர் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கோஷமிட்டவாறே கடையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அஸ்தம்பட்டி போலீஸ் உதவி ஆணையாளர் உதயகுமார் மற்றும் காவல் துறையினர்போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யப்போவதாக கூறினர்.
ஆனால் மதுக்கடையை இடமாற்றம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனே போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும், தரையில் அமர்ந்து காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்தபடி ஆண்கள் சாலையில் படுத்தும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதும், சில பெண்கள் மீதும் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரையும், பெண்களையும் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போலீசார் அவர்களை கைது செய்தனர். இவ்வாறு 7 பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.



