ஆந்திரப் படுகொலை; அதிமுக அரசு மௌனம்: விஜயகாந்த் கண்டனம்

சென்னை: ஆந்திர வனப்பகுதியில் நடந்த படுகொலை சம்பவத்தில் ஆளும் அதிமுக அரசின் மெளனத்தை கண்டிப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில், ஆந்திர வனப்பகுதியில் (07.04.2015) அன்று அதிகாலை ஆந்திர வனத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் நடத்திய துப்பாக்கி சூடு தற்காப்பிற்காக நடத்தப்பட்டதென்று ஆந்திர மாநில காவல்துறையும், வனத்துறை அதிகாரிகளும், கூறியபோதும், அந்த படுகொலை நடந்த நேரம், இடம், பலியானவர்கள் உடம்பில் காணப்பட்ட தீக்காயங்கள் எந்த ஒரு ஆந்திர போலீசார் மீதும் ஒரு சிறுகீறல் கூட இல்லாதது இறந்தவர்கள் பக்கத்தில் போடப்பட்டிருந்த செம்மரகட்டைகளில் எழுதபட்டிருந்த எண்கள் என அனைத்துமே இந்த படுகொலை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்பதை ஊர்ஜிதபடுத்தும் விதமாக இருந்தது. இதை ஆந்திர மனித உரிமை சங்கம் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் உள்ள உண்மையை உணர்ந்துகொண்ட ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனசாட்சியோடும், நீதிமன்றத்தின் மாண்பை, நிலைநிறுத்தும் பொருட்டும், துப்பகிசூடு நடத்திய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஆந்திர அரசை வலியுறுத்தியது. அதன் பேரில் கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்கள் யாரும் இது வரையில் கைது செய்யப்படவில்லை. தவறு செய்தவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிமுக அரசு கடிதம் மட்டுமே எழுதிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்ப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது படுகொலைதான் என்று நிரூபிப்பதற்கு இறந்தவர்களில் ஆறுபேரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமான சாட்சியாகும். ஆனால் இதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்பதைபோல தமிழக அரசு மெளனம் சாதிப்பது, இந்த இருபது பேரில் யாராவது ஒருவர் தமிழக அமைச்சருக்கோ, முதலைமைச்சருக்கோ சொந்தமானவர்கள் என்றால் இப்படி இருப்பார்களா என்பது போன்று மக்கள் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தப் படுகொலை சம்பந்தமாக தெரிந்த விஷயங்களை சாட்சியங்களாக இரண்டு பேர் கூறியிருக்கிறார்கள். ஆந்திராவிற்கு தினக்கூலிகளாக வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். எனவே இந்த படுகொலை பற்றி இன்னும் அதிகமாக உண்மைகளை தெரிந்த பொதுமக்கள் நீதிமன்றத்திலோ, தமிழகத்தை சார்ந்த சமூக ஆர்வலர்களின் உண்மையறியும் குழுவிடமோ அல்லது காவல்துறையிடமோ தெரிவிக்கலாம் என்றும் தெரிவிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இப்படுகொலை பற்றி தெரிந்தவர்கள் இது போன்ற படுகொலைகள் இனிமேல் நடைபெறாவண்ணமும், இறந்த தமிழர்களின் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிற காரணத்தினால் அவர்களுக்கு அரசின் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் இழப்பீட்டு தொகை போன்ற நிவாரணங்கள் கிடைக்க வழி செய்யும் பொருட்டு மேற்கூறியவர்களிடம் உண்மைகளை தெரிவிக்கவேண்டும் என்று பொது மக்களை தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். – என்று கூறியுள்ளார்.