“சட்டத்துக்கும் விலக்கு உண்டு.”

77134_693849987312454_1034041963_n

“சட்டத்துக்கும் விலக்கு உண்டு.”

(பெரியவாள் சட்ட – சம்பிரதாயங்கள் மீறாதவர்கள்.

என்றாலும், எங்கே விலக்கு அளிக்கவேண்டும்
என்ற நுட்பமும் அறிந்தவர்கள்.)

சொன்னவர்-.ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஆறு கஜம் புடவை கட்டிக்கொண்டு ஓர் அம்மாள்
தரிசனத்துக்கு வந்தாள். மடத்துக்கு வருவது முதல்
தடவை போலும். ஒன்பது கஜம் புடைவை கட்டிக்

கொண்டு வருவதுதான் குடும்பப் பெண்டிரின்
சம்பிரதாயம் என்பதை அறியவில்லை.

ஸ்ரீமடத்தின் மகாபக்தை என்று தன்னைப்பற்றிப்
பெருமைப்பட்டுக் கொண்டிருந்த ஓர் அம்மையார்
இந்த ‘ஆறு கஜ’த்தைப் பார்த்துவிட்டார். வந்ததே
கோபம்! “மடிசார் கட்டிக்கொள்ளாமல் பெரியவாளை
தரிசிக்கக்கூடாது” என்று உரத்த குரலில் உத்தரவே
போட்டுவிட்டார்!.

அந்த சமயம் பார்த்து (அம்மையாரின் துரதிருஷ்ட

வசமாக) பெரியவா அந்த பக்கம் வந்தார்கள்.

“என்ன கூச்சல்? என்ன சண்டை?”

விவரம் பெரியவாளுக்கு தெரிவிக்கப்பட்டது.

நடுங்கிக் கொண்டிருந்த மடிசார் மாமியைக்
கூப்பிட்டார்கள் பெரியவா.

” அந்த அம்மாள் ரொம்ப ஏழை. அவளிடம் ஒன்பது
கஜம் புடவையே கிடையாது. வாங்க முடியல்லே!
நீ உடனே கடைக்குப் போய், ஒன்பது கஜம் புடவை
இரண்டும், ரவிக்கைத் துண்டும் வாங்கிக்கொண்டு
வந்து கொடு” என்று சற்றுக் கடுமையான குரலில்
கூறினார்கள்.

அந்தபடியே புடவைகள் வாங்கிக்கொண்டு வந்து,
ஏழை அம்மாளை மடிசார் கட்டிக்கச் சொல்லி
பெரியவாளிடம் அழைத்து வந்தார்.

“ரொம்ப சரி. ஆனாலும் நீ பண்ணினது தப்புதான்.
அந்த அம்மாகிட்டே மன்னிப்பு கேட்டுக்கோ…”

பெரியவாள் சட்ட – சம்பிரதாயங்கள் மீறாதவர்கள்.
என்றாலும், எங்கே விலக்கு அளிக்கவேண்டும்
என்ற நுட்பமும் அறிந்தவர்கள்.