திருப்புகழ்க் கதைகள் 170
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கதியை விலக்கு – பழநி
சுக்ரீவனின் வீரம்
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியிருபத்தியெட்டாவது திருப்புகழ் ‘கதியை விலக்கு’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “அடியார்கள் துதித்து நல்வாழ்வு பெறுகின்ற புதிய தாமரை மலர்போன்ற திருவடியையும், அடியேன் ஒருபோதும் மறக்கமாட்டேன்.”என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் கூறுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனத னவெற்பு மேல்மிகு …… மயலான
கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
கனதன மொத்த மேனியு …… முகமாறும்
அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையு …… முலகேழும்
அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிந வபத்ம பாதமு …… மறவேனே
இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
ரணமு கசுத்த வீரிய …… குணமான
இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற
இதமோ டளித்த ராகவன் …… மருகோனே
பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொ டுநிற்கு மீசுர …… சுரலோக
பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – சூரியன் மகனாய், ரசோகுணம் உடையவனாய், வாலியை எதிர்த்து தோற்று நின்றவனாய், கடுமையான போர்க்களத்தில் தூய வீரம் படைத்தவனாய் நின்ற சுக்ரீவனுக்கு பெரிய அரசாட்சியைப் பெற்று வாழுமாறு அன்புடன் உதவி புரிந்த ஸ்ரீராமரது திருமருகரே. பதினொரு உருத்ராதிகளின் ஒளிவீசும் திருக்கோயிலில் அன்புடன் எழுந்தருளியிருக்கும் தலைவரே. (தேவருலகில் உள்ள) நறுமணம் வீசும் கற்பகக் காட்டில் வரிவண்டுகள் சூழ்ந்து மொய்ப்பதனால் மலர்கள் உதிர்கின்ற பழநி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமிதமுடையவரே!
நற் கதியை அடைய முடியாது விலக்கும் பொது மாதர்களின் மேல் மிகுந்த மயக்கத்தால் உண்டான, கவலை கொண்ட மனத்தை உடையவனாக அடியேன் இருந்த போதிலும், தேவரீருடைய புகழ்பெற்ற சிறந்த பொன் போன்ற திருமேனியையும் ஆறுமுகங்களையும், நிரம்ப வலிமையான வயிரமணி போன்ற தோள்களையும், கூர்மையான முனையுடைய வெற்றிவேலையும், பாம்பைப் பிடித்த மயிலையும், ஏழு உலகங்களும் அதிருமாறு கூவுகின்ற சேவலையும், அடியார்கள் துதித்து நல்வாழ்வு பெறுகின்ற புதிய தாமரை மலர்போன்ற திருவடியையும், அடியேன் ஒருபோதும் மறக்கமாட்டேன் – என்பதாகும்.
இத்திருப்புகழில் சூரியன் குமாரன் சுக்ரீவன் பற்றி அருணகிரியார் கூறுகிறார். க்ரீவம் என்றால் கழுத்து; சு என்பதற்கு அழகு என்று பொருள். அழகிய கழுத்து உள்ளவன் சுக்ரீவன். இவன் வாலியிடம் தோல்வியுற்றவனாய் இருப்பினும் சுத்த வீரன். நன்றி உள்ளவன். நட்புக்கு உரியவன். இராமரிடம் மிக்க அன்பாக நடந்தவன்.
இவன் முதன்முதலாக இராவணனைக் கண்டான். கண்டவுடன் சீற்றம் கொதித்து எழுந்தது. உடனே விட்டில் பூச்சியைப் போல் பாய்ந்தான். இராவணனுடன் கடும் போர் புரிந்தான். அவனுடைய பத்துத் தலைகளையும் பிடித்துத் திருகித் திருப்பினான். இராமர் திருவடியில் வைத்து வணங்கினான். ஆனால் இராவணனுடைய தலைகள் இல்லை. மணிமகுடங்கள் தான் இருந்தன. இராவணனுக்குத் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று.
சுக்ரீவன் நாணினான். “பெருமானே! நாட்டிலே குகப்பெருமான் செய்த நன்மையைப் போலவும் அடியேன் செய்திலேன்; காட்டிலே சடாயு வேந்தன் செய்த தியாகத்தையும் செய்திலேன்; இராவணனை நேரில் கண்டேன்; கண்டும் எம்பிராட்டியை மீட்டிலேன். அவனுடைய தலைகளையும் கொணர்ந்தேனில்லை” என்று கூறி தனது நன்றியறிவினை நனி புலப்படுத்தினான்.
காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்டமாட்டேன்,
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன்,
கேட்டிலேன் இன்றுகண்டும் கிளிமொழி மாதராளை
மீட்டிலேன், தலைகள் பத்தும் கொணர்ந்திலேன் வெறும் கை வந்தேன்.
(கம்பராமாயணம், யுத்தகாண்டம், மகுடபங்க படலம்)
அடுத்து “கால் வலிகாட்டிப் பரந்தேன்” என்று கூறுகின்றதனால் அவனுடைய ரசோகுணம் வெளியாகின்றது. இராமர் கிட்கிந்தைக்கு அரசனாக சுக்ரீவனுக்கு முடி சூட்டினார். ஒருவராலும் கொல்ல முடியாத வாலியைக் கொன்று அவனை வாழ வைத்தருளினார்.
இப்பாடலில் அருணகிரியார் பதினொரு ருத்திரர்கள் பற்றியும் கூறுகிறார். வடமொழியில் இதனை ஏகாதச உருத்திரர் என்பர். மாதேவன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விஜயன், வீமதேவன், சௌமியன், பவோத்பவன், காபாலி, அரன் ஆகியோரே அந்த ஏகாதச ருத்திரர் ஆவர்.