
திருப்புகழ்க் கதைகள் 199
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
குறித்தமணி – பழநி
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?
வேதத்தைப் பற்றிச் சம்பந்தர் பேசியிருந்தாலும் கொள்கைகள் அளவில் சமணர்களோடு சம்பந்தர் வாது புரிந்திருப்பார் என்று கருத இடமேயில்லை. அவரது விருப்பத்தை இறைவன் நிறைவேற்றியதாகத் தேவாரத்தில் ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சம்பந்தர் மிகுந்த கோபத்தில் இருந்தார் என்பதற்குத் தேவாரத்திலேயே ஆதாரம் இருக்கிறது.
சந்துசேனனும் இந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயான் நிற்கவே.
சந்துசேனன் கந்துசேனன் போன்ற பெயர்களை வைத்துக்கொண்டு (தமிழ்ப் பெயர்அல்ல, வடமொழிப் பெயரும் அல்ல, பிராகிருதப் பெயர் என்று சொல்கிறாரோ?) தமிழும் வடமொழியும் அறிந்ததின் பயன் தெரியாமல் மந்திபோலத் திரியும் குருடர்களுக்கு நான் இளைத்தவன் அல்லன். ஏனென்றால் ஆலவாயில் இருக்கும் சிவன் எனக்குத் துணை நிற்கின்றான். அதாவது மொழிகளின் பயனே இறைவனைத் துதிப்பதற்குத்தான், வாதம் செய்வதற்கு அல்ல என்கிறார்.

மற்றொரு பாடலில் மது அருந்தாமல் தவம் செய்வதாகக் கூறிக்கொண்டு அவம் செய்யும் இவர்களுக்கு நான் இளைத்தவன் அல்லன் என்கிறார்:
கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியுங் குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந் திவணநந்தியு மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ மேதவம்புரி வோமெனும்
சினகருக்கெளி யேனலேன்றிரு வாலவாயார னிற்கவே.
ஆனால் பல்தேய்க்கும் பழக்கம் கிடையாது, குளிப்பது அரிது, இரண்டு கையாலும் சாப்பிடுவது, ஆடையின்றி அலைவது போன்ற பழக்கங்களுக்கு கழுமரமா பரிசு? வசைகள்தான் பரிசு. எத்தர், கையர், குண்டர் போன்ற சொற்பரிசுகள் அளிக்கப்படுகின்றன.
‘நீங்கள் எக்கேடும் கெட்டுப் போகலாம். ஆனால் பொதுமக்களைச் சிவபக்தியிலிருந்து திசை திருப்ப வேண்டாம்’ என்று தேவாரப் பாடல்கள் சொல்கின்றன. சமணமதம் என்ன சொல்கிறது, அது எவ்வாறு மக்களைத் திசை திருப்புகிறது என்பதற்கெல்லாம் இந்தப் பாடல்களில் விடை கிடைக்காது. பாடல்கள் பக்தர்களுக்காக, நம்பிக்கை உள்ளவர்களுக்காக, இயற்றப்பட்டவை. சந்தேகப் படுபவர்களுக்காக, வாதம் செய்பவர்களுக்காக அல்ல.
கொள்கை அளவில் சம்பந்தர் சமணர்களோடு வாது செய்ய விரும்பவில்லை என்று தோன்றுகிறது. மேலும் பக்திமார்க்கம் வாதத்தை விரும்பாதது. நம்பிக்கை இருக்கும்போது வாதம் எதற்கு? நாயன்மார்கள் சிவபக்தி ஒன்றே உய்வதற்கு வழி என்று திண்ணமாக நம்புகிறவர்கள். உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய வேண்டும். இது சமணர்களுக்குக் கைவராது. எனவே அவர்கள் திட்டப்படுகிறார்கள்.
உணர்ந்துணர்ந்து உரைத்துரைத்து இறைஞ்சும் வைணவர்களும் திட்டுகிறார்கள். திருமாலின் திருவடிகளைத் தொழும் திருமங்கையாழ்வாரும் வந்திக்கும் மற்றவர்க்கும்மா சுடம்பின் வல்லமணர் தமக்கும் அல்லேன் என்று கூறுகிறார். அறியார் சமணர், அயர்த்தார் பௌத்தர் சிறியார் சிவப்பட்டார் என்பது திருமழிசை ஆழ்வார் வாக்கு.
தர்க்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையான் சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே என்கிறது ராமானுஜ நூற்றந்தாதி. இதை வைத்துக்கொண்டு வைணவர்கள் மற்றைய சமயத்தைச் சார்ந்தவர் அனைவரையும் அழித்தொழித்தனர் எனக் கூறமுடியுமா? திருவரங்கத்து அமுதனாரும் சம்பந்தரைப் போலவே தங்கள் நிற்பதற்காகவேதான் பாடுபடுகிறேன் என்று சொல்கிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
சண்டை சமணர்களுக்கும் சைவர்களுக்கும் மட்டும் இல்லை. சமணர்- பௌத்தர், சமணர் – வைணவர், வைணவர் – சமணர், வைணவர் – சைவர் போன்ற பல சண்டைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. பக்தியை வலியுறுத்தும் சைவர்களுக்கும் வழிபாட்டு முறைகளை வலியுறுத்தும் சைவப் பிராமணர்களுக்கும் இடையேகூட உரசல் இருந்தது. சமணர்களும் இவற்றைப் போலப் பல ‘வசவு’ப் பாடல்களை எழுதியிருக்கலாம். அவை அழிந்துவிட்டன என்று கமில் சுவலபில் கருதுகின்றார்.