திருப்புகழ்க் கதைகள் பகுதி 354
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-
வரி சேர்ந்திடு – திருவேங்கடம்
13 நாள்களில் இரண்டு கிரகணங்கள் – 3
மகாபாரதம் ஒரு சிறந்த இதிகாசம், இது இன்றைய இந்து மதத்தின் தூண்களில் ஒன்றாகும். மகாபாரதக் கதையும் அதன் தார்மீக நெறிமுறைகளும் பல தலைமுறைகளாக மில்லியன் கணக்கான மக்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. துவாபர யுகம் கலியுகத்திற்கு மாறுவதற்கு முன் மகாபாரதப் போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. மகாபாரதப் போர் மற்றும் கலியுகத்தின் தொடக்கம் ஆகியவை எப்போது என்பது பல நூற்றாண்டுகளாக குழப்பமாக இருந்து வருகின்றன.
ஆர்யபட்டா, புகழ்பெற்ற ஆரம்பகால வானியலாளர் ஆவார், ஆர்யபட்டா (கி.பி. 476-550) கலியுகம் 3600 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, அவருக்கு 23 வயதாக இருந்தபோது, கிமு 3102 ஆகத் தொடங்கியது எனக் கூறுகிறார். இதன் மூலம் மகாபாரதப் போர் சுமார் கிமு 3130-3140 இடையே நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
சூரிய சித்தாந்தம் என்ற நூல் ஏறக்குறைய அதே காலகட்டத்தில் உருவான ஒரு ஆவணம், கலியுகம் ஒரு அமாவாசை நாளில் தொடங்கியபோது சூரியன் இளவேனில் பகலிரவுச் சமநாள் அட்சரேகையின் அடிப்படையில் 54 டிகிரி தொலைவில் இருந்தது என்று இந்த நூல் கூறுகிறது. அதாவது இது உஜ்ஜயினி நகரத்தின் அட்ச, தீர்க்கரேகையில் (75 டிகிரி 47 நிமிடம் கிழக்கு, 23 டிகிரி 15 நிமிடம் வடக்கு) அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
மற்றொரு புகழ்பெற்ற வானியலாளர் வராஹ மிஹிரா (கி.பி. 560) தன்னுடைய பிரிஹத் சம்ஹிதையில் சக யுகம் தொடங்குவதற்கு 2526 ஆண்டுகளுக்கு முன்பு (சாலிவாஹன சகாப்தம் அல்லது விக்ரமீய சகாப்தம், அதாவது கி.பி. 79 அல்லது கிமு 57) சப்தரிஷி மண்டலம் (உர்சா மேஜர்) மக நட்சத்திரத்திற்கு அருகில் இருந்தபோது, யுதிஷ்டிரர் மன்னராக இருந்தார் எனக் கூறுகிறார்.
தற்போது, பாரம்பரிய சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள், ஸ்ரீகிருஷ்ணர் மறைந்தபோது கிமு 3102இல் கலியுகம் தொடங்கியது என்றும், கிமு 3138இல் மகாபாரத போர் நடந்தது என்றும் கருதுகின்றனர். அந்தக் கணக்குப்படி மிலேனியம் ஆண்டு கி.பி 2000 கலியப்தத்தின் 5102ஆம் ஆண்டாகும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரதம் உலகின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது அதிக மக்கள் தொகை கொண்டதாக உள்ளது. வட பாரதத்தில் பல நூறு தலைமுறை மக்கள் ஒரே பகுதியில் வசிப்பதால் தொல்பொருள் சான்றுகள் கிடைப்பது கடினமாக உள்ளது. எனவே, காலங்களை உறுதிப்படுத்த புராண மற்றும் வேத (எழுத்து மற்றும் வாய்வழி பாராயணம்) வானியல் ஆதாரங்களைத் தேடுவது வழக்கம். ஒரு புறநிலை பகுப்பாய்வு ஒரு வரலாறு உண்மையா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவும்.
மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம், உத்யோக பர்வம், சபா பர்வம் ஆகியவற்றில் பல வானியல் தகவல்களை வியாசர் குறிப்பிடுகிறார். அதில் ஒரு ஸ்லோகத்தில் – நான் அமாவாசை அல்லது பௌர்ணமிக்குபின்னர் 14 நாளில், 15 நாளில், சில சமயம் 16ஆவது நாளில் வருகின்ற கிரகணங்களைப் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால் 13ஆம் நளில் வருகின்ற கிரகணத்தைப் பற்றி அறிந்ததில்லை – எனச் சொல்லுகிறார்.
கோளரங்க மென்பொருளை பயன்படுத்தி குருக்ஷேத்திரத்தில் கிமு 3500ஆம் ஆண்டு முதல் கிமு 700ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த கிரகணங்களை வானியல் அறிஞர்கள் ஆய்வு செய்தார்கள். அந்தக் காலகட்டத்தில் 4350 சந்திர கிரகணங்களும் 6960 சூரிய கிரகணங்களும் நடந்துள்ளன. இவற்றுள் 672 ஜோடி கிரகணங்கள் குருக்ஷேத்திரத்தில் காணக்கூடியவை. அதாவது ஒரு சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து அடுத்த அமாவாசையில் சூரியகிரகணம் நிகழ்வது. இந்த 672 கிரணகங்களுள் 32 ஜோடி கிரகணங்கள் 14 நாள்களுக்கும் குறைவான காலத்தில் நடந்துள்ளன.
மகாபாரதத்தில் தரப்பட்டுள்ள சில கோள்களின் நிலையயும் இந்த தகவலோடு இணைத்துப் பார்க்கும்போது மகாபாரதப் போர் கிமு 3129 அல்லது கிமு 2559 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
நான் இதனை நம்பியிருக்கவே மாட்டேன். ஆனால் 2020ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் நாள் சந்திர கிரகணம், ஜூன் 21ஆம் நாள் சூரிய கிரகணம், ஜூலை 5ஆம் நாள் மீண்டும் சந்திர கிரகணம் நடந்தபோது, அப்போதுதான் மூன்று கிரகணங்களில் ஏதேனும் இரண்டு 13 நாள்கள் இடைவெளியில் நடக்கலாம் என்பது எனக்குப் புரிந்தது. இதனைப் பார்த்து நான் வியந்தது போலவே வியாசரும் வியந்து தமது மகாபாரத காவியத்தில் இந்தக் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.