December 8, 2024, 5:37 AM
25 C
Chennai

பாரதி-100: பெருமிதக் கல்வி! பெருந்தனக் கல்வி! நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..?!

subramania bharati 100 1
subramania bharati 100 1

இன்று நாம் தேசியக் கல்விக் கொள்கை பற்றி பெரிதும் விவாதிக்கிறோம். கல்விக் கொள்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்றும் பேசுகிறோம்.

இரு நூற்றாண்டுக்கு முன்னர் மெக்காலேயால் சிதைக்கப் பட்ட கல்விக் கொள்கையை, ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தேசியக் கவி பாரதியாரும் தம் கட்டுரைகளில் கண்டனம் செய்து, எப்படி இது பெருமித உணர்வையும் பெருமையையும் அளிக்கும் வகையில் திகழ வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

அவர் தமது சுயசரிதைக் கதையிட்ட கவிதையில் இதனை வெளிப்படுத்தினார். பெ.தூரன் என்று பிரபலமாக அறியப்படும் செந்தமிழ்ச் செல்வர் ம.ப.பெரியசாமி தூரன் 1928இல் சென்னை மாநிலக் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலேயே மகாகவி பணியாற்றிய ‘சுதேசமித்திரன்’ அலுவலகத்துக்குச் சென்று பழைய சுதேசமித்திரன் இதழ்களையெல்லாம் தேடி பாரதியின் படைப்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சேர்த்து “பாரதி தமிழ்” எனும் நூலை வெளியிட்டிருக்கிறார்.

பாரதியார் முதலில் மிஸ்டர் C.சுப்பிரமணிய பாரதி என்றும், பின்னர் காளிதாஸன், சக்திதாஸன் என்ற புனைபெயர்களிலும் எழுதினார். சில முறை ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதி என்றும் குறித்திருக்கிறார். பெ.தூரன் பாரதி புகழ் பரப்பிய வெகுசிலரில் முதன்மையானவர்.

1920 மே மாதத்தில் மகாகவி பாரதியார் எழுதி, ஐந்து நாட்கள் ‘சுதேசமித்திரனில்’ வந்த கட்டுரையில் கல்விக் கொள்கை குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அதனைத் தம் பாரதி தமிழ் தொகுப்பில் பெ.தூரான் பதிவு செய்திருக்கிறார். பாரதியார் புதுச்சேரியை விட்டு வெளியேறி கடையம் சென்று தங்கியிருந்த நாட்களில் இவை எழுதப்பட்டிருக்கலாம், ஏனெனில் அவர் மறுபடி சுதேசமித்திரனில் 1920 நவம்பர் மாத மத்தியில்தான் வேலைக்குச் சேர்ந்தார். சுதந்திர இந்தியாவில் “தேசியக் கல்வி” எப்படி இருக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தை பாரதி இந்தக் கட்டுரையில் கொடுத்திருக்கிறார்.

மகாகவி பாரதி தனது சுய சரிதையில் அன்றைய ஆங்கிலப் பள்ளிக் கல்வி முறை பற்றி, அதாவது மெக்காலே கல்வித் திட்டம் குறித்து மனம் நொந்து கூறிய வார்த்தைகள் அறிவுள்ளவர்கள் மனத்தில் பெரும் வருத்தத்தையே ஏற்படுத்தும்.

ALSO READ:  செங்கோட்டை: சூரசம்ஹார விழா கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

“நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
நேருமாறெனை எந்தை பணித்தனன்… எனத் தொடங்கும் அந்தக் கவிதையில்,

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர், பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்,
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்,

வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
துணியுமாயிரஞ் சாத்திர நாமங்கள் சொல்லுவா
ரெட்டுணைப் பயன் கண்டிலார்.

கம்பனென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளிதாசன் கவிதை புனைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்பருந்திறலோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்,
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின்
இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான் மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும்,
பேரருட்சுடர் வாள் கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர் தம் தீயகோல் வீழ்த்தி
வென்ற சிவாஜியின் வெற்றியும்,

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்… என்று ஆங்கிலப் பள்ளியில் படிக்கச் செல்லும் மாணவனின் அறிவுத் திறம் எத்தகையதென வளரும் என்று பட்டவர்த்தனமாய்ப் பாடிக் காட்டினார்.

இந்தக் கல்வியால் பெருத்த செலவே என்று சாடும் பாரதி…

செலவு தந்தைக்கோர் ஆயிரஞ் சென்றது;
தீது எனக்குப் பல்லாயிரஞ் சேர்ந்தன
நலமோர் எட்டுணையும் கண்டிலேன் இதை
நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்!
சில முன்செய் நல்வினைப் பயனாலும்,
நந்தேவி பாரதத் தன்னை அருளினும்
அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்து நான்
அழிந்திடாதொருவாறு பிழைத்ததே! – நல்லவேளை என் அறிவு சிதையாமல் பிழைத்தது, பண விரயமும் தவிர்க்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் கவிதையில் பாரதி வெளிப்படுத்திய உள்ளம் இதுதான்…

இந்தப் பாடலில் மகாகவி சொல்ல வந்த கருத்து இதுதான்:- “திருநெல்வேலி சென்று ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயிலுமாறு என் தந்தை என்னைப் பணித்தனன். ஒரு சிங்கக் குட்டியிடம் புல்லைக் கொடுத்து சாப்பிடச் சொல்லுவது போலவும், ஒரு பார்ப்பனப் பிள்ளையை கசாப்புக்கடை வைத்து வியாபாரம் பண்ணச் சொல்வது போலவும், என் தந்தை என் விருப்பத்துக்கு மாறாக ஆங்கிலக் கல்வி பயில அனுப்பி வைத்தனன். இந்தக் கல்வியை விரும்பிப் பயில்பவர் யார் தெரியுமா? வெள்ளையர்களிடம் கைகட்டி சேவகம் செய்ய விரும்புவோர், அடிமைகள், நாய் போல் அலைந்து திரிந்து வேவு பார்க்கும் ஒற்றர்கள், எப்படியேனும் வயிற்றுக்குச் சோறு கிடைத்தால் போதுமென நினைத்து தம் உயிரையே விற்கத் துணியும் பேடிகள், பிறரை முகஸ்துதி பேசி வயிறு வளர்ப்போர் ஆகியோர் பயிலும் கல்வி.

ALSO READ:  வாடிப்பட்டி சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை!

பன்னிரண்டாண்டு கணிதம் படித்தாலும் வானிலுள்ள விண்மீன் கோள்கள் பற்றிய அறிவினைப் பெறமாட்டார். ஆயிரம் காப்பியங்கள் படித்தாலும், அவற்றில் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் அறியமாட்டார். வணிகநூலும், பொருள்நூலும் கற்பார் எனினும் நம் நாட்டின் பொருளாதார சீர்கேட்டுக்குக் காரணங்கள் இவையெனும் அறிவு பெறமாட்டார். ஆயிரம் வகை சாத்திரங்கள் பற்றிப் பேசுவார், ஆயினும் அதனால் எந்தப் பயனும் காணமாட்டார். இவற்றிலெல்லாம் மிகப் பெரிய கேடு என்ன தெரியுமா? நம் தேசத்தில் கம்பன் என்றொரு மகாகவி மானுடத்தின் பெருமை பேசியதையோ, காளிதாசன் எனும் தெய்வீகக் கவி பராசக்தியின் வரம்பெற்று காப்பியம் செய்ததையோ, வானசாஸ்திரத்தில் கரைகண்ட பாஸ்கராச்சார்யா பற்றியோ, பாணினி வடமொழிக்கு இலக்கணம் கண்டதையோ, வாழ்வியல் பற்றிய அத்வைத சாஸ்திர ஞானத்தை உபதேசித்த ஆதிசங்கரர் பற்றியோ, இந்த ஆங்கிலக் கல்வி பயிலும் மாணவர்கள் அறியமாட்டார்கள்.

அதுமட்டுமா? சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் செய்ததையோ, தெய்வமாக்கவி திருவள்ளுவன் வான்மறையாம் திருக்குறள் இயற்றியதையோ, தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் அறநெறி பிறழாமல் நாட்டை ஆண்டதையோ, அசோக சக்கரவர்த்தி தர்மம் தவறாமல் ஆட்சி புரிந்ததையோ, அன்னியர்களின் அக்கிரம ஆட்சியை எதிர்த்து வீரர்கள் போற்றும்படியாக போர்புரிந்து வெற்றிகொண்ட சத்ரபதி சிவாஜி பற்றியோ, இப்படி எதையும் ஆங்கிலக் கல்வி புகட்டும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறியமாட்டார்கள். பண்டைய நாட்களில் நம் நாடு பெற்றிருந்த பெருமைகளையும், இன்று நமக்கு ஏற்பட்டிருக்கிற சிறுமைகளைப் பற்றியும் இவர்களுக்குத் தெரியாது. என்ன சொல்லி இவர்களுக்கு இந்த உண்மையை உணர்த்துவேன்? இவர்களை நினைத்தால் என் உள்ளம்தான் எரிகிறது.

ALSO READ:  திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம்? ஹிந்துக்கள் அதிர்ச்சி!

மனதில் சூதுவாது ஏதும் தெரியாத என் தந்தை எனக்கு ஏதோ நல்லது செய்வதாக எண்ணிக்கொண்டு என்னை கொடும் விலங்குகள் வாழும் ஓர் பாழ் குகைக்குள் தள்ளிவிட்டான். ஐயர் என்றும் துரை என்றும் சொல்லி ஆங்கிலக் கலைபற்றி எனக்கு எடுத்துச் சொல்லி ஆங்கிலக் கல்வியுள் என்னை வீழ்த்திய பொய்யர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். அந்தப் பாடங்களைப் பொழுதெல்லாம் படித்து, உடல் அயர்ந்து, கண்கள் கருவட்டமிட்டு குழிவிழுந்து, என் சக்தியையெல்லாம் இழந்து, மனம் நொந்துபோய், என் சுதந்திரத்தை இழந்து, மனதில் பயம் மிகுந்து, அறிவு தெளிவற்று உடல் துரும்பாய் மாறி அலைந்ததால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா?

என் தந்தைக்கு செலவு ரூபாய் ஆயிரம் ஆயிற்று. எனக்கோ தீமைகள் பல்லாயிரம் சேர்ந்தன. நல்ல பலன் என்பது எள்ளளவுகூட கிடைக்கவில்லை. இதை இங்கு மட்டுமல்ல நாற்பதாயிரம் கோயிலில் வந்து சத்தியம் செய்து சொல்லுவேன். ஏதோ எனது நல்ல காலம், நான் முன்பு செய்த நல்வினைப் பயனாலும், நம் பாரத தேவியின் அருட் கருணையாலும், பேரிருளில் சிக்கி அழிந்து போகாமல் ஒரு வழியாக பிழைத்து எழுந்து விட்டேன்.

இத்தகைய கருத்து கொண்ட பாரதி மெக்காலேயின் கல்வித் திட்டத்திற்கு வேறு மாற்று கல்வித் திட்டம் ஏதேனும் வைத்திருந்தாரா? இந்த கேள்வி பலர் மனதில் எழுந்திருக்கும். 1920 மே மாதத்தில் அவர் எழுதிய இந்தக் கட்டுரையில் அவர் மாற்றுக் கல்வித் திட்டத்தைப் பற்றிய தனது கருத்தை விளக்கி எழுதியிருக்கிறார். குற்றம் சாட்டும் போதே அதற்கு மாற்று என்ன என்பதையும் பாரதி யோசித்து வந்திருக்கிறார் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

author avatar
செந்தமிழன் சீராமன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week