spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்நூலரங்கம்கலைமகள் தீபாவளி மலர் 2022 - ஒரு பார்வை

கலைமகள் தீபாவளி மலர் 2022 – ஒரு பார்வை

- Advertisement -
kalaimagal malar 2022

விமர்சனம் : – மீ.விசுவநாதன்

“கலைமகள் தீபாவளி மலர் – 2022”
(ஆசிரியர்: கீழாம்பூர சங்கரசுப்பிரமணியன் )

ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த “கலைமகள் தீபாவளி மலர்” 27.10.2022 அன்று மதியம் கிடைத்தது. தபால் உரையைப் பிரித்ததும் கண்களுக்கும், மனத்திற்கும் குளிர்ச்சியாக இருந்தது ஓவியர் வேதாவின் கண்ணன், ஆண்டாளின் அழகான முகப்போவியம். ஆண்டாளின் கையில் பச்சைக் கிளி, கண்ணனின் கிரீடத்தில் கொழுக் கொண்ட மயில் பீலி என்னை ஈர்த்து,” வா வா ஒவ்வொரு பக்கமும் உனக்கான விருந்து காத்திருக்கிறது” என்று அழைத்துப் போனது.

பக்கத்தைத் திருப்பியதும்,” நமது வாழ்க்கை புனிதமாக வேண்டும், நாமும் பகவத் பக்தர்களாக வேண்டும் என்றெல்லாம் யாருக்கு எண்ணம் வருகிறதோ அவர்களுக்கு முதலில் இருக்க வேண்டிய தகுதி “த்வேஷம் இல்லாமை” என்பதாகும் என்று சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்யார் அனந்த ஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் அருளுரையின் முதல் வரியின் உண்மைப் பொருள் என் மனத்தில் ஆழப்பதிந்தது.

அடுத்து இந்திரா சௌந்தர ராஜன் எழுதிய மகாப் பெரியவர் ஒரு பார்வை என்ற கட்டுரையும், நல்லி குப்புசாமி செட்டியார் எழுதிய “சேஷாத்ரி ஸ்வாமிகளும், செந்தில் துறவியும்” என்ற கட்டுரையும் ஆன்மிகச் சிந்தனைக்கு விருந்து. சேஷாத்திரி சுவாமிகள் பிறந்து இளம் வயதிலேயே துறவறம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் சித்தராக வலம் வந்து கொண்டிருந்தார். தன்மைகனுக்குத் திருமணம் செய்வித்துப் பார்க்க விரும்பிய பெற்றோர்களுக்கு அந்தப் பேறு வாய்க்கவில்லை. ஆனால் அதே போன்று ஒரு நிகழ்வை, செந்தில் துறவி என்ற கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் நல்லி அவர்கள். ஆனந்த விகடனில் பொறுப்பாசிரியராக இருந்த கோபாலகிருஷ்ணன் தம்பதியர்க்குக் குழந்தை இல்லை. அதனால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்க்கிறார். நடராஜன் என்ற அந்தப் பிள்ளையோ பதினாறு வயதிற்குப் பிறகு திடீரென்று சந்யாசம் வாங்கிக் கொண்டு விட்டார். என்றாலும் எந்தப் பற்றும் இல்லாமலே வீட்டில் இருந்து கொண்டு தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்ந்து மறைந்தார் செந்தில் துறவி.

துறவிகளால் சமுதாயத்திற்குப் பல சிறந்த பணிகள் நடந்து வருகின்றன என்றாலும் அவர்களைப் பெற்ற தாய், தந்தையர்களின் மனம் என்ன நினைப்பில் இருக்கும் என்பது அவர்களுக்கே வெளிச்சம். வாழ்க்கை வினோதமானதுதான் என்று ஒரு ஆழமான சிருகதையைபோல முத்தாய்ப்பு வைக்கிறார் கட்டுரை ஆசிரியர்.

எழுத்தாளர் மாலனின் “அம்மாவின் கிரீடம்” தடகள வீராங்கனையின் கதையைச் சொல்கிறது. ஏழைத்தாய் ஒருத்தி தன் மகளைப் பல தடைகளைக் கடந்து அவளுக்குப் தடகளப் பயிற்சி கொடுத்து வெளிநாட்டில் நடக்கும் தடகளப் போட்டியில்,”அன்னம் கண்ணகி, இந்தியா, வெள்ளி” என்று பெயரும், பதக்கமும் வாங்கி, தலையில் ஆலீவ் கிரீடத்தைக் கொள்ளும் புகழைச் சொல்லும் அருமையான சிறுகதை.

“சூடிக் கொள்ளப்படும் கிரீடங்கள் எல்லாம் யாரோ எவரையோ வருத்திப் பெற்றவைதான். மகுடங்களில் மாணிக்கங்கள் மட்டும் அல்ல,கண்ணீர்த் துளிகளும் ஒளிர்கின்றன.” கதையில் வரும் இந்த வாக்கியமே கதையின் மையக்கரு.

இந்திர நீலன் சுரேஷின் “தரையில் இறங்கும் ராக்கெட்டுகள்” கட்டுரை விஞ்ஞான முன்னேற்றத்தைப் பறை கொட்டுகிறது. ராக்கெட் செலுத்தும் நோக்கம், பயன் எல்லாம் ரசிக்கும் படியாகச் சொல்லி, விரைவில் அனைவரும் செவ்வாய் கிரத்திதில் குடியேறலாம் என்றும் பச்சைக் கொடி காட்டுகிறது.

கவியோகியின் “அம்மன் சன்னதி ஒரு கவிதை” இறையின் தன்மையை இசைப் பாடலாக இசைக்கலாம் என்றால்,

“போகத்தைத் துறந்து புலனைதும் வென்றால்
தேகத்துள் உறையும் தெய்வத்தைக் காண்போம்!

உள்ளக் கோயிலில் ஓங்கார வடிவமானான்
கள்ள மனமேநீ கைகட்டிப் பணிந்திரு!”

என்று கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரம்
“ஞான விடியல்” என்ற தலைப்பில் அகவற் பாவில்
பதியம் போடுகிறார்.

கல்லிடை நீலகண்டனின் அழகிய ஓவியங்களும், அதற்கான எளிய வசன கவிதைகளும் சபாஷ் போட வைக்கிறது.

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் அவர்களின் தமிழ்த்தொண்டு, இசையறிவு, தேவாரம், திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், பெரிய புராணம், திருஅருட்பா போன்ற பக்தி, இலக்கிய நூல்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமை, அவருக்கும் அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களுக்கும் இருந்த நெருக்கம் என்று விரிவாகச் சொல்கிறார் அறப்பணியாளர் சி. ரவீந்திரன்.

போடோகிராபர் ஒருவரின் காதல் உணர்வுகளை, அனுபவங்களை “பத்மவியூகம் ” சிறுகதையாகத் தந்திருக்கிறார் எழுத்தாளரும், போடோக்ராபருமான “கிளிக்”ரவி.

எப்படி நடிகர் நம்பியாரை வில்லனாகப் பார்த்த ரசிகர்கள் எம்.ஜி.ஆர். ரை எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்களோ அதைப்போல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதைகளைப் படித்தவர்களுக்கு அவர் ஒரு த்ரில்லர் என்ற நினைப்பு வரலாம். ஆனால் அவர் ஒரு மனிதாபிமானி, சிறந்த பண்பாளர் என்ற கருத்தை மிகவும் சுவைபடப் பதிவு செய்திருக்கிறார் பாக்கெட் நாவல் “ஜி. அசோகன்” .

நாவல்களைப் படமாக்கினால் வெற்றி பெருமா? அப்படி வெற்றி பெற்ற நாவல்கள் எவை? என்று ரசிக்கும் படி”நாவல்கள் திரைப்படங்களாய் உருமாறும்போது” என்ற கட்டுரையில் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியாரின் வெற்றிக்குப் பலகாரணங்கள் இருந்தாலும் ஹீரோவாக நம்பியார் பதினோரு வேடங்களில் நடித்திருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். ஒருவர் நான்கு நாட்கள் தூங்காமல் இருந்தால் நான்காவது நாள் அவரிடமிருந்து ரகசியங்களைக் கறந்து விடமுடியும் என்ற உளவியல் காரணமும் இப்பட வெற்றிக்குக் காரணம் என்கிறார். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலே வெற்றிப் படமாகவும் ஆனது. அதுபோல் எழுத்தாளர் மணியனின் இலவுகாத்த கிளி டைரக்டர் பாலச்சந்தரின் “சொல்லத்தான் நினைக்கிறேன்”ஆகி வெற்றியும் கண்டது. ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவல் பீம்சிங் இயக்கத்தில் வெற்றி பெற்று தேசிய விருதுகளும் பெற்றது.

சிவசங்கரியின் 47 நாட்கள், நண்டு, அவன்-அவள்-அது , ஒருமனிதனின் கதை, தியாகு போன்ற நாவல்களும் திரைப் படமாக வெற்றி பெற்றன. கல்கியின் பொன்னியின் செல்வனும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இதுபோன்ற பல தகவல்களைத் தந்து கலக்கி இருக்கிறார் எழுத்தாளர், டாக்டர் ஜெ. பாஸ்கரன்.

பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனை , கல்கி அவர்கள் மனம்போலவே மிகவும் ரசித்து எழுதி வந்தியத்தேவன் என்றும் வாழ்வார் என்று வாழ்த்துகிறார் நாடக ஆசிரியர், கவிஞர் சந்திரமோகன்.

“பனிக்காற்றில் ஒரு நாட்டுப் பற்று” ஒரு சிறப்பான சிறுகதை. உண்மைச் சம்பவம் என்ற ஆசிரியர் கூற்று பெருமிதம் தந்தது. ராணுவத்தில் பணி செய்யும் ஒருவரின் காதல் கதை. ஆசிரியர் காந்தலக்ஷ்மி சந்திரமௌலி கதையைக் கொண்டு செலுத்தும் மொழி நடை அருமை. பாராட்டுகள்.

” ஒருவர் எதற்காக எழுதுகிறார்” என்ற என்.விஜயராகவனின் கட்டுரையும், “வாசிக்கும் பழக்கத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்” என்ற கட்டுரையும் ஒவ்வொருவரும் படித்தறிந்து, உணர்ந்து கொள்ள வேண்டும். தேவையான தகவல்கள் நிறையவே கொட்டிக் கிடக்கின்றன அந்தக் கட்டுரைகளில்.

“அநுத்தமா” கலைமகளின் செல்லக் குழந்தை. அவரது படைப்புகளை கலைமகள் விரும்பி வெளியிட்டது. ராஜேஸ்வரி என்ற இயற்பெயரை அநுத்தமா என்று அவரது மாமனார்தான் மாற்றினார். புகுந்தவீடு அவரைக் கொண்டாடியது. சிறுகதைகளைவிட அவரது நாவல்களே வலிமை வாய்ந்தது என்று குறிப்பிடுகிறார் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்.

“அணைக்கரை வீரன் ” செங்கோட்டை ஸ்ரீராம் எழுதிய சிறுகதை. செவிவழிச் செய்தியின் அடிப்படையில் எழுதியது என்று ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். படிக்கும் போது அந்த கலங்க்காதகண்டி ஊருக்குள் வலம் வந்த சுகம் கிடைக்கிறது. நான்கு பகுதிகள் கொண்ட இந்தக் கதை பேசப்படும். வாசகர்கள் படிக்கட்டும் என்றுதான் விவரிக்க வில்லை.

இன்னும் இன்னும் தமிழ்த்தேன் சொட்டும் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் கொட்டிக் கிடக்கிறது தமிழர்களே….படியுங்கள்.. படியுங்கள் என்று நாதஸ்வர மேளம் முழங்கக் கொட்டுகிறேன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe