To Read it in other Indian languages…

Home இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை பொல்லாச் சிறகு விரித்தாடினாற் போலே..!

பொல்லாச் சிறகு விரித்தாடினாற் போலே..!

ஆக… ஆக… நாம் தெய்வத்தமிழர் என்பதில் பெருமிதம் கொள்ளத் தகும்! தகும்!

peacoci lemon - Dhinasari Tamil

இப்போதெல்லாம் அதிகாலை காலை மாலை என்று நேரம் எதுவும் இல்லை.. அதிகாலை 4 மணிக்கு கொல்லைப் புறப் பக்கம் போனாலும்கூட… மயிலின் கூவல் குரல் கேட்கவே செய்கிறது .. பா இலக்கணத்தில் செப்பலோசை அகவலோசை என்றெல்லாம் படித்த நினைவு வருகிறது. மயில் அகவும் என்று அப்படியே சொன்னாலும் இப்போது யாருக்கும் புரியவா போகிறது?

மயில் தோகை விரித்து ஆடுவது பார்க்க நன்றாகத்தான் உள்ளது, ஆனால் கத்தல் காதைத் துளைக்கிறது… என்றுதான் யாரிடமாவது பேசும் போது சொல்லத் தோன்றுகிறது! பேஸ்புக் வழியே பழக்கமான ஒரு பெண்… (இப்போது யாழ்குழலி என்று பேரை மாற்றிக் கொண்டிருக்கிறார்) அனந்தை நகரில் இருக்கிறார். ஒருமுறை நான் மயிலின் கூவல் குரல் குறித்து எழுதி இருந்தபோது… அவர் பதிவிட்டிருந்த பதில் என் நினைவில் வந்து வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது!

மயில் ஆடுவது அழகுதான்… ஆனால் சத்தம் தான் கேட்க சகிக்காது.. ஐஸ் வண்டிக்காரன் ஹாரன் அடிக்கிற சவுண்டு… அது! காதுக்கு நாராசமா இருக்கும் – என்று பதிவிட்ட அந்தக் கருத்து…!

இப்போது மயில் குரலைக் கேட்டாலும்… ஏனோ சின்ன வயசில் கண்முன்னே உலவிய ஐஸ் வண்டிக்காரன் இப்போது நினைவில் வந்து நின்று விடுகிறான். .

மயிலுக்குப் போட்டியாய் அவ்வப்போது சில நாரைகளும் இன்னும் சில பறவைகளும் வந்து ஏதோ நாட்டியமாட முயற்சி செய்துவிட்டு… சற்று நேர பொழுது போக்குக்கு வழி செய்துவிட்டு பறந்து விடுகின்றன.! குயிலும் மைனாவும் அருகே வந்து அழகு காட்டிச் செல்கின்றன. இந்த சத்தங்களைப் பிரித்தறிந்து… இப்போது மூளையும் பழகிவிட்டது.

குயிலின் குரலைக் கேட்டு காகம் பாட முயன்றதாம்..! இரண்டும் கருப்பு தான், உருக் கொண்ட வண்ணம் ஒன்றுதான் ஆயினும் கருக் கொண்ட ஒலியின் வெளிப்பாடு வேறன்றோ!

இப்போது மயிலைப் பார்க்கிறேன்… பள்ளியில் படித்த பாடல் நினைவில் வந்து மோதுகிறது… வாய் முணுமுணுக்கிறது…

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

மூதுரை தந்த முதியவள் ஔவைப் பாட்டிக்கு ஏனோ பொல்லாச் சிறகென்ற உவமானம் சொல்லத் தோன்றியிருக்கிறது. வான்கோழி தன் சிறகால் ஏதும் பொல்லாத்தனம் செய்ததா? அல்லது பொல்லாத்தனம் ஏதும் செய்தபோது ஔவை அதனைக் கண்டாரா?

ஒருவேளை, கல்லாதான் என்ற உவமைக்காகக் கூறப் புகுந்த ஔவை பொல்லாத்தனம் அவனுக்கு மிக்கிருக்கும் என்ற கருத்தைப் பதிய வைப்பதற்காக, வான்கோழியின் சிறகு விரித்தலை பொல்லாச் சிறகெனப் பாடினாரா? என்னன்னவோ யோசனைகள்!

மயிலின் சிறகு அழகு. வான்கோழியின் சிறகு அழகற்றது. அழகற்ற சிறகை விரித்து ஆட்டம் காட்டுவது எனச் சொல்வதற்காக, பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற்போலே… என்று குறிப்பிட்டதால்… பொல்லாச் சிறகுக்கு அழகற்ற தன்மை ஏறியிருக்கிறதோ என்னவோ?!

முறையாகக் கல்லாதவன், கற்றோர் கூறுவதைக் கேட்டு தானும் அக்கூட்டத்தினனாகக் கருதிக் கொண்டு… சொல்லப் புகுந்தால்… அது பொல்லாத்தனம் மிக்கதாகக் கருத இடமுண்டு.

என் சென்னை வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில்… மஞ்சரி இதழின் ஆசிரியராக இருந்த லெமன் என்ற லட்சுமணன் சார் நிறைய சின்ன சின்ன துணுக்குகளாக விஷயங்களை அவ்வப்போது சொல்வார்… தன்னை பெரிதும் வெளிக்காட்டிக் கொள்ளாத சங்கோஜி. ஒற்றை நாற்காலியில் ஒடுங்கிப் போவார். ஆனால் ஏதாவது விஷயத்தை படித்தாலோ அல்லது காதால் ஒன்றைக் கேட்டாலோ விமர்சனம் அழகாக அவரிடமிருந்து வரும்.

நான் சென்னை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராக அவ்வப்போது குரல் காட்டிக் கொண்டிருந்தேன்… எஃப்எம் ரெயின்போ எப்எம் கோல்டு சேனல்களில் திரையிசைப் பாடல்கள் தொகுப்பு நிகழ்ச்சியினூடோ… சற்று கவித்துவமான வார்த்தைகளால் பாடலுக்கான முன்னெடுப்பு அலங்காரத்தை வெளிப்படுத்துவேன் … அதை லெமன் சார் கேட்டுக்கொண்டிருப்பார். பெரும்பாலும் இரவு நேர மென்மையான பழைய பாடல்களை தொகுத்து வழங்கும் போது எனது இலக்கிய ரசனையையும் சேர்த்தே கொடுப்பேன்.. அவற்றுக்கான விமர்சனங்களை மறுநாள் காலை அலுவலகத்தில் நானும் அவரும் மட்டும் இருக்கும் நேரத்தில் அதிகம் வெளிப்படுத்துவார்…

பயன்பாடு என்ற சொல்லை ஒரு முறை நான் உச்சரித்த போது… ‘ப’வுக்கு கொஞ்சம் அதிக அழுத்தம் கொடுத்து உச்சரித்தேன்! மறு நாள் அலுவலகத்தில்… “என்னமோ சார்… இந்த திருச்சி பக்கத்தில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் பயன்பாட்டை இப்படித்தான் பயன்படுத்துகிறார்கள் என்று காதைக் கடித்தார்! லெமன் சார் சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

அடுத்து ஒரு சுவாரஸ்யமான தகவலையும் கூடவே சொன்னார் அப்போது எம் எஸ் சுப்புலட்சுமி பாடல்கள் அதிகம் பரவத் தொடங்கி இருந்தன… சினிமாவில் அவர் பாடும் பாடல்கள் பாமர வெளியில் பலராலும் பாடப்பட்டன… கச்சேரிகளிலும் எம்எஸ் குரலிலேயே பாடி வெளிப்படுத்த பாடகிகள் சிலர் ‘மிமிக்ரி’ டைப் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்…

அவர் பாடி இருந்த ஒரு பாடல் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தது கண்டதுண்டோ கண்ணன் போல் பாடலை சிலர் இமிடேட் செய்து பாடினார்கள் …
ஒரு விமர்சகர் எம் எஸ் பாடும் த்வனியையும் சேர்த்தே விமர்சனம் செய்தார்… போல்… போல … என்ற இரு சொற்களையும் ராகத்துக்காக ரிப்பீட் செய்து… அது வேறு மாதிரியாக வந்துவிட்டது… “எம்.எஸ்., ஆவது பரவாயில்லை… ஆனா சிலர் அந்த ‘போ’…வுக்கு அழுத்தம் கொடுத்து… அது என்னமோ… லபோ லபோன்னு அடிச்சிக்கிற மாதிரியே இருக்கு… அட ஏன் சார்…? கண்ணனை மாதிரி கண்டதுண்டான்னு கேட்டுட்டு… ஏன் தான் இப்படி லபோ லபோன்னு அடிச்சிக்கிறாளோ தெரியல…” என்றாராம்..!

அந்தப் பாட்டு…

கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்
கண்டதுண்டோ கண்ணன் போல சகியே

வானமுகில் போலும் மேனி வண்ணம் கொண்டான்
நானிலம் மயங்க கானம் பயில்வான்
ஆயர்பாடி தன்னில் ஆநிரைகள் மேய்ப்பான்
நேயமாகப் பேசி நெஞ்சம் புகுவான்

கண்மணி நீ என்பான் கைவிடேன் என்பான்
கணம்தான் கண்ணிமைத்தால் காணான்
கண்ணா கண்ணா என்று நான் கதறிடும் போதினில்
பண்ணிசைத்தே வருவான் சகியே !

இந்த பாடலை உதாரணமாக கூறிவிட்டு லெமன் சார் இன்னொரு சொல்லையும் உதாரணமாக காட்டுவார்… இந்தப் பாடலில் நானிலம் மயங்க கானம் பயில்வான் – என்று வரும். இந்த கானத்தை … ‘க’வை கனத்து உச்சரித்தால் தான் கானம் வரும். இல்லாவிடில் அது காட்டுத்தனமாகிவிடும் என்பார்…

பயில்வான்… என்பதில் ‘ப’வை மென்மையாக உச்சரிக்க வேண்டும். கனம் கொடுத்தால்… அவன் அடாவடித்தன பயில்வானாகிவிடுவானே… என்பார்!

இப்போதும் சிலர் தமிழில் எழுத்துக்கள் குறித்து பேசத்தான் செய்கிறார்கள் … க ச ட த ப – எழுத்துகளுக்கு சம்ஸ்க்ருத அடிப்படையில் அமைந்த மொழிகளில் நான்கு வித உச்சரிப்பு கனம் கூடியும் அழுத்தம் கொடுத்தும் மென்மையாகவும் உச்சரிக்கப் பட்டு, வேறுபாட்டைக் காட்டும் எழுத்துருக்களும் இருக்கின்றன. நம் தமிழிலோ இது தேவைப்படாது. காரணம், பயிற்சி. தமிழுக்குத் தேவை பயிற்சி, பயிற்சி… பழக்கம்…மட்டுமே! எனவேதான் தமிழ்த் தாய்க்கு மகனாய்ப் பிறந்து தாமும் அம்மாவில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று வேற்று மொழி ஆன்றோர் கருதினர்.

ஆக… ஆக… நாம் தெய்வத்தமிழர் என்பதில் பெருமிதம் கொள்ளத் தகும்! தகும்!

  • செங்கோட்டை ஸ்ரீராம் (செந்தமிழன் சீராமன்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.