
கவிதை: பத்மன்
பாட்டுக்கொரு புலவனன்றோ பாரதிநம் தலைவனன்றோ
நாட்டுக்கொரு கவிஞன்றோ நாடிவந்த தெய்வமன்றோ
ஏட்டருமை சொல்லிடவோ எடுத்தியம்பல் எளிதாமோ?
காப்பரிய செல்வமன்றோ கவிப்புதையல் அதுவன்றோ?
தீப்பிழம்பு வரிகளன்றோ தேன்கரும்புச் சுவையன்றோ
பூப்போன்ற சொல்லன்றோ பூகம்பக் கருத்தன்றோ
வில்லில்லா கணையன்றோ விடுதலையின் விடையன்றோ
நல்லோர்க்குத் துணையன்றோ தவறுகளின் தடையன்றோ
பொல்லாங்கைக் கண்டவுடன் பொசுக்கிவிடும் கனலன்றோ
வில்லங்கம் செய்வோரை வீழ்த்திவிடும் புயலன்றோ
புண்ணியரைப் போற்றிடவே பொங்கிவரும் கடலன்றோ
அன்னையராம் பெண்குலத்தை வாழவைக்கும் வயலன்றோ
பாரதத்தின் பெருமைகளை பறைசாற்றும் முரசன்றோ
நானிலத்தில் மேன்மைபெற நாதமிடும் குழலன்றோ
வேதாந்தக் கருத்துகளை விளங்கவைக்கும் வேணுவன்றோ
மானுடத்தை உயர்த்திடவே மகிமையூட்டும் உடுக்கையன்றோ
பாரதியை நம்பிடுவோம் பாரினிலே புதுமைசெய்வோம்
தீக்குள்ளே விரலைவைத்தும் தெய்வத்தையே தீண்டிடுவோம்
இனியொரு விதிசெய்வோம் ஏழ்மையை ஒழித்திடுவோம்
எல்லோரும் ஓர்நிறையாம் சமத்துவத்தை ஏற்றிடுவோம்.