புழல் சிறையில் பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இருவருக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புழல் சிறையில் கைதிகளாக உள்ள ‘அல் உம்மா’ இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவருக்கும், சிறை அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இசுலாமிய அடிப்படைவாத இயக்கமான அல் உம்மா – அமைப்பைச் சேர்ந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் இருவரும் புழல் சிறை – எண் 1ல் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கே சிறைக் கைதிகளுக்கு ஒவ்வொரு வாரமும் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படும். சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் மனு அளிக்கவில்லையாம்.
ஆனால், அவர்கள் சார்பில் சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், உயர் பாதுகாப்புப் பிரிவுக்கு சிறை காவலர்களுடன் சென்ற கண்காணிப்பாளர் செந்தில்குமார், தன்னிடம் ஏன் மனு கொடுக்கவில்லை என்று கேட்டதாகவும், இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு செந்தில்குமாரை பிலால் மாலிக் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் கீழே தள்ளியதாகவும், இதனால் மற்ற காவலர்கள் பிலால் மாலிக்கை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் புழல் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.