
காந்தியடிகளின் கொள்கைகளையும், மத்திய அரசின் திட்டங்களையும், மக்களிடம் எடுத்துச் சொல்ல இன்று முதல் 2020 ஜன.30 வரை பாஜக., சார்பில் ‘காந்தி சங்கல்ப யாத்திரை’ நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையை பல்வேறு இடங்களில் பாஜக., தலைவர்கள் தொடங்கி வைத்தனர். கோவையில் வானதி சீனிவாசன் பங்கேற்று யாத்திரையை தொடங்கி வைத்தார்.
அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காந்தி சங்கல்ப யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரையில் பாஜக., எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர். ஒவ்வொருவரும் 15 நாட்கள் தங்கள் மக்களவைத் தொகுதியில் நடைபயணம் செல்கின்றனர்.
இந்தப் பாதயாத்திரையின் போது காந்திஜியின் கொள்கைகள், போதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லப் படும். மேலும், மத்திய, மாநில பாஜக., அரசுகள் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் பலவும், காந்திய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை எனவும், ஒவ்வொரு திட்டமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதமாக அமைந்தவை எனவும் அவர்கள் விளக்கவுள்ளனர்.

இன்று காலை பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, இந்த யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இந்த யாத்திரை பொறுப்பாளராக மாநில பாஜக., துணைத் தலைவர் அரசகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு யாத்திரை தொடங்கியது.
சென்னையில் இந்த யாத்திரையை பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருந்த போது… மஹாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் அக்டோபர் 2 தொடங்கி சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியிலும் 150 கிமீ தூரம் விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்த பிரதமர் திரு நரேந்திர மோதி @NarendraModi அறிவுறுத்தினார்.
பாரதப் பிரதமரின் அறிவுறுத்தலின் படி அக் 2 காலை 7 மணிக்கு மஹாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளில் தி.நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து தென்சென்னை தொகுதி விழிப்புணர்வு பாத யாத்திரையைத் தியாகராய நகரில் தொடங்குகிறேன்.. என்று குறிப்பிட்டிருந்தார்.
இது போல், கோவையில் பாஜக.,வின் வானதி சீனிவாசன் காந்தி சங்கல்ப யாத்திரையை தொடங்கி வைத்தார். இது குறித்த வீடியோ பதிவையும் தனது டிவிட்டரில் வெளியிட்டிருந்தார் வானதி சீனிவாசன்.
https://twitter.com/VanathiBJP/status/1179259972875669505