
தஞ்சையை அடுத்த வயலூரை சேர்ந்த தம்பதி பாஸ்கரன் – பிரித்தி. இவர்களுக்கு கெவின் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது.
கெவினுக்கு ஜூரம் வந்துள்ளது. அதனால், நேற்று காலை தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கி சென்றனர். அப்போது, செக் செய்த டாக்டர்களோ, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்றனர்.

இதனால் அதிர்ந்த பெற்றோர், அழுதுகொண்டே குழந்தையை சொந்த ஊருக்கு எடுத்து வந்து இறுதி சடங்கு செய்தனர். சவப்பெட்டியில் இருந்து குழந்தையின் அசைவு தெரியவும், அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். உடனே திரும்பவும், கெவினை தூக்கிக்கொண்டு அதே ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

“குழந்தைக்கு உயிர் இருக்கு.. என்னன்னு பாருங்க” என்று கண்ணீருடன் பதறியவாறே சொன்னார்கள். அப்போது டாக்டர்கள், இப்பதான் சில நிமிடத்துக்கு முன்புதான் உயிர் இழந்ததாக கூறினர். இதை கேட்டதும், திரும்பவும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்ததுடன் ஆவேசமும் அடைந்தனர்.
உடன்வந்த சொந்தக்காரர்கள், கிராம மக்கள் என அந்த ஆஸ்பத்திரி முன்பே திரண்டு முற்றுகை போராட்டத்தில் இறங்கினர். குழந்தையுடன் முதலில் வந்தபோதே டாக்டர்கள் சரியாக பார்த்திருந்தால் எங்கள் குழந்தை இறந்திருக்காது.

குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி, 5 மணி நேரம் கழித்துதான் உயிர் போயிருக்கு, இவங்க அலட்சியத்தால எங்க குழந்தையை பறி கொடுத்துவிட்டோம்” என்று அழுதவாறே தெரிவித்தனர். குழந்தை ஒரு கவனகுறைவால் உயிரிழந்த இந்த சம்பவத்தினால் மக்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.
பலரையும் இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. வெறும் ஜுரத்தினால் உயிர் போய்விட்டது என்று சொல்வதை ஏற்று கொள்ள முடியாவிட்டாலும், முதல் தடவையே ஒழுங்காக செக் செய்திருக்க வேணாமா என்று மக்கள் குமுறுகிறார்கள். கெவினின் இந்த மரணத்தை இன்னமும் யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லைதான்!