
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மொத்தம் எட்டு பேரை மிதித்துக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜாவை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் வனப்பகுதியில் உலவித் திரிந்த அரிசி ராஜா, அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம். வீடுகளை சூறையாடி, ரேசன் அரிசியை விரும்பி உண்டு வந்ததால் அதற்கு அரிசி ராஜா என்ற பெயர் வந்தது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய பகுதிகளில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை அரிசி ராஜா இதுவரை 8 பேரை தாக்கிக் கொன்றுள்ளது. 7 பேர் அரிசி ராஜாவிடம் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும், இந்த யானை ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் வீடுகளையும் சேதப்படுத்தி வந்தது. அரிசி ராஜாவைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக கடந்த சனிக்கிழமை கும்கி யானையைக் கொண்டு அரிசி ராஜாவைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கும்கி யானை சலீமுடன் யானையைப் பிடிக்கும் பணியில் இறங்கினர். அர்த்தநாரிப் பாளையம் சுற்று வட்டார வனப்பகுதிக்குள் பல்வேறு திசைகளில் பிரிந்து 3 நாட்கள் இரவு பகலாக காத்திருந்த வனத்துறையினரிடம் பருத்தியூர் வனப்பகுதி அருகே சிக்கிய அரிசி ராஜா மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
அரை மயக்கத்தில் இருந்த அரிசி ராஜா, அதனைப் பிடிக்க வந்த கும்கி யானை கலீமுடன் வர மறுத்து முரண்டு பிடித்தது. ஆனால், கும்கி யானை கலீம் அதனை விடாமல் முட்டி சமதளத்துக்கு இழுத்து வந்தது. ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டு அதில் லாரியை இறக்கி, யானை அரிசி ராஜா பெரும் போராட்டத்துக்குப் பின் ஏற்றப்பட்டது.
பிடிபட்ட அரிசி ராஜா யானை, வரகளியாறு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அதை வளர்ப்பு யானையாக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.
இதனிடையே, அரிசி ராஜாவைப் பிடிக்க உதவிய கலீம் என்ற கும்கிக்கு பாராட்டு குவிகிறது. எட்டரை அடி உயரம் கொண்ட கலீமின் எடை 5.5 டன். 1972 ஆம் ஆண்டில் ஏழு வயதாக இருந்த போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிடிபட்ட கலீம், கும்கியாக மாற்றப்பட்டது.
இதுவரை 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை பிடிக்கும் பணியில் கலீம் ஈடுபட்டுள்ளது. இதில் எந்த ஒரு பணியிலும் கலீம் தோற்றதில்லை என்று வனத்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பதற்றமின்மை, நிதானம், எப்படிப்பட்ட காட்டு யானைகளையும் அடக்கும் வல்லமை, பணியின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பது என மற்ற கும்கிகளை விட கலீமுக்கு சிறப்பு பண்புகள் இருப்பதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.