
இல்லத்தரசிகளுக்கு இனிமையான செய்தியாக, வெங்காயம் விலை அதிரடியாகக் குறைந்தது சென்னையில்!
வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக எக்கச்சக்கமாக எகிறியது. இதனால் சாதாரண பொதுமக்கள் முதல் ஹோட்டல் முதலாளிகள், சிறு கடைக்காரர்கள் வரை பலரும் பாதிக்கப் பட்டார்கள்.
திருமண விழாக்கள் வரிசைகட்டி நின்ற நிலையில், வெங்காயம் வாங்குவதற்கு விழி பிதுங்கி நின்றார்கள்! பட்ஜெட்டில் பெரும் சவாலாக இருந்தது வெங்காயம்.
இதற்குக் காரணமாக, சென்னைக்கு வெங்காய வரத்து குறைவு என்றும், வட மாநிலங்களில் பெருமழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப் பட்டது என்றும் கூறப் பட்டது.
இந்த நிலையில், சென்னையில் வெங்காயம் கிலோவுக்கு ரூ. 180, ரூ. 200 என்று உயர்ந்து கொண்டே போனது. இந்த நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கும் விதத்தில்.. இன்று ஒரே நாளில் ரூ.20 முதல் ரூ.40 வரை சரிவு கண்டுள்ளது வெங்காயம்.
ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்ததாலும், பொதுமக்கள் பயன்பாட்டை குறைத்ததாலும், சென்னையில் வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது என்றார்கள் வர்த்தகர்கள்.