மேலப்பாவூரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை 25 நாட்களுக்குள் நிரந்தரமாக
மூடப்படும் என்று அளித்த வாக்குறுதி படி கடை மூடப்படாததால் பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது.
ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில் சுற்று வட்டார பகுதியில்
இருந்து ஏராளமானோர் வந்திருந்து மது குடித்து வருகிறார்களாம். தற்போது
பாவூர்சத்திரம் பகுதியில் பெரும்பாலான மதுக்கடைகள் பொதுமக்களின் போராட்டத்தால்
மூடப்பட்டு விட்டதால் மேலப்பாவூரில் உள்ள குறிப்பிட்ட மதுகடைக்கு வரும்
குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இதனால்
கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே.2ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தென்காசி தாசில்தார் அனிதா மற்றும்
போலீசார் முன்னி;லையில் 25 நாட்களுக்குள் மதுக்கடை நிரந்தரமாக மூடப்படும் என
எழுத்துப்பூர்வமாக டாஸ்மாக் சூப்பர்வைசர் தங்கராஜ் எழுதி கொடுத்துள்ளார்.
தற்போது 25 நாட்கள் கடந்தும் வாக்குறுதி அளித்தப்படி கடை மூடப்படாததால்
அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள்
பணியும் பாதிக்கக் கூடாது ,அதே சமயம் போராட்டமும் வெற்றி பெற வேண்டும்
என்றெண்ணி பெண்கள் போராட்டக் களத்தில் பீடி சுற்றிக்கொண்டு போராட்டத்தையும்
பயனுள்ளதாக்கினர் இதற்கிடையே மேற்கண்ட கடையை அருகில் உள்ள
சடையப்பபுரத்திற்கு மாற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த பகுதி
மக்களும் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கடை மாற்றம் செய்யமுடியவில்லை.
எனவே இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று
பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




