
குறைந்தபட்சம் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங், ரீ – ரெக்கார்டிங், டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும் தொலைக்காட்சி படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்கினால் சம்மேளனத்தின் 40, 50 சதவிகித தொழிலாளர்கள் வேலை செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் அவர்கள் பட்டினி சாவிலிருந்து தப்பிக்க முடியும் என பெஃப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தூத்துக்குடி மாவட்டத்தில் 4672 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் சுயக்கட்டுபாடுடன் இருந்தால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம்.

வெளி மாநிலத்தில் பணிபுரிந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3700 பேர் சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்து உள்ளனர். வெளிமாவட்டத்தில் இருந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களை கண்காணிக்கவும் சோதனையிடவும் 14 பிரதான சாலைகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.
கிராம சாலைகளில் கூடுதலாக 40 இடங்களில் காவல்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதியளிப்பது பற்றியும் ஆலோசித்து விரைவில் தெரிவிக்கப்படும்” என தெரிவித்தார்.