
கோவை தெலுங்குபாளையம் டெக்ஸ்டூல் காலணி பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் – சுகன்யா தம்பதி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் செல்வபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகத்தில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக, சுகன்யா காம்பிளான் பவுடர் வாங்கி உள்ளார்.
ஏற்கனவே பயன்படுத்திய பாக்கெட்டில் இருந்த பவுடர் நேற்று காலியானவுடன், நேற்று இரவு கடந்த மாதம் வாங்கிய காம்ப்ளான் பாக்கெட்டை திறந்து சிறுவன் ரித்திக் விஜய்க்கு பாலில் கலந்து கொடுத்து உள்ளார்.
இந்நிலையில் இன்று சிறுவனுக்கு மீண்டும் இன்று காம்பிளான் கொடுக்க பாக்கெட்டை திறந்த போது அதில் இறந்த நிலையில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து சிறுவனின் பாதுகாப்பு கருதி உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புதுறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், பல்லி காம்ப்ளானில் இருந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் வலியுறுத்தியள்ளனர்.



