சென்னை:
கூவத்தூர் சொகுசு விடுதியில் அன்று 122 எம்.எல்.ஏ.க்களைப் பிடித்து வைத்திருந்ததால்தான் இன்று ஆட்சி நிலைத்திருக்கிறது என்று டிடிவி தினகரன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பிறந்த நாள் இன்று திராவிட இயக்கத் தொண்டர்களால் கொண்டாடப் பட்டு வருகிறது. இன்று காலை முதலே அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஈ.வே.ரா., சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள ஈ.வே.ரா., சிலைக்கு மலர் தூவி டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். ஈ.வே.ரா.,வின் 139 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் ஆதரவாளர்களும் சென்று மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அனைத்து அமைச்சர்களும் ரத்த அழுத்தம் அதிகரித்தது போல் கோபப்படுகின்றனர் என்று கூறியவர், கூவத்தூர் விடுதியில் 122 பேரை பிடித்து வைத்ததால் தான் ஆட்சி நிலைத்துள்ளது என்றார். மேலும், அவர்கள், தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த போது சுய நினைவு இல்லையா? என்று கேட்டவர், மூன்றாம் தர மேடைப் பேச்சாளர் போல் முதலமைச்சர் பேசியதைக் கேட்டு வேதனைப்படுகிறேன்; முதல்வராக இருப்பவர் மிரட்டும் தொனியில் பேசுவது அழகல்ல என்று கூறினார்.
சசிகலாவை முதல்வராகுமாறு காலில் விழுந்து வலியுறுத்தியவர்தான் திண்டுக்கல் சீனிவாசன் என்று கூறிய தினகரன், ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா காரணம் எனக் கூறியவர்களுக்கு மானமுள்ளதா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
எப்படியோ, முதல்வர் என்ற பதவிக்கு ஒருவரை முன்னிறுத்தி, முதல்வராக்கி, அவரை மூன்றாந்தர மேடைப் பேச்சாளர் போல் பேசவும் வைத்து, இன்று அதை நினைத்தே வேதனைப் படும் உயரிய மரியாதைக்கு உரியவராகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார் தினகரன் என்பது மட்டும் அரசியலை உற்று நோக்கும் எவருக்குமே எளிதில் விளங்கிவிடும்.



