தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
குரங்கணி மலையில் மலையேற்றப் பயிற்சியின் போது ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா ரு.4 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும்.
காட்டுத் தீயில் சிக்கிய 26 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவத் துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், தீயில் சிக்கி லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாக வழங்கப்படும்
– இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் முதல்வர்.