சென்னை : சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மைய வைரவிழாக் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் பேசுகையில், தமிழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி தனது பேச்சைத் தொடங்கினார்.
சென்னை கிண்டியில் உள்ள அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய வைரவிழா கட்டிடம், செவிலியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட நான்கு புதிய கட்டிடங்களை பிரதமர் திறந்துவைத்தார். அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா, பிரதமர் நரேந்திர மோடிக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார். நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து தமிழர்களுக்கும், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறித் தனது பேச்சைத் தொடங்கிய மோடி, தேசிய சுகாதாரத் திட்டத்தில் நோய்களை வரும் முன் காக்கும் பணி நடந்து வருகிறது என்றும், 10 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் அளவுக்கு தேசிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு அருகிலேயே நோய் தடுப்பு வசதிகளை வழங்குவதே அரசின் கொள்கை. 14 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
டாக்டர் சாந்தா விடுத்த கோரிக்கைகளை பரிந்துரை செய்யும்படி தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். அரசின் நிதியுதவில் செயல்படும் உலகின் பெரிய காப்பீட்டுத் திட்டம் துவங்கப்பட உள்ளது. நமது சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெருமை கொள்ளும் வகையில் புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று கூறிய மோடி, 15ஆவது நிதி ஆணையத்தின் மூலம்,மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படும் என அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பரப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசின் மருத்துவ மையங்கள் மூலம், கடந்த 6 வருடங்களில், ஒரு கோடியே 71 லட்சம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையும், 2 கோடியே 10 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனையும் நடைபெற்றிருப்பதாக கூறினார்.
விழாவில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.