தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துரித மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு, தகவல் தொழில்நுட்பம் உதவியுடன், விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போதுள்ள நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு தரவரிசைப்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 2 முறை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகம் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் தேர்வர்களுக்கு பண விரயம், கால விரயம் ஏற்படுகிறது. எனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்களது இணையவழி விண்ணப்பத்தில் கூறியுள்ள அனைத்து தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய மூலச்சான்றிதழ் களை (ஒரிஜினல் சான்றிதழ்) ஸ்கேன் செய்து இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் முறையை அரசு பணியாளர் தேர்வாணையம் முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது.

இந்த நடைமுறை 23-ந் தேதி முதல் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகள் குரூப்-2 (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிலிருந்து தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த மாதம் 4-ந் தேதிக்கு முன்னர் தங்களது மூலச்சான்றிதழ்களை அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யவேண்டும்.

இதற்கென மூலச்சான்றிதழ்களின் ஸ்கேன் படிவத்தின் தரத்தை உறுதி செய்யும் வகையில் இ-சேவை மையங்கள் வழியாக ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சான்றிதழ் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 கட்டணமாக இ-சேவை மையங்களில் வசூலிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறையில் இணையவழி மூலம் பெறப்படும் சான்றிதழ்கள், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வி தகுதிகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

இதன் மூலம் தகுதி மற்றும் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக் கப்படும் விண்ணப்பதாரர்கள் ஒருமுறை தேர்வாணைய அலுவலகத்துக்கு மூலச்சான்றிதழ்களுடன் நேரில் வந்தால் போதும். இ-சேவை மையங்களின் முகவரி, அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இணைய வழிமூலம் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்:-
மூலச்சான்றிதழ்களின் தெளிவான வண்ண படிவம் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யவேண்டும்.
குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ சான்றிதழ்களின் நகலை பதிவேற்றம் செய்யவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ள தகுதிக்கான சான்றிதழ்கள் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுபோனால் அவர் பதிவு செய்துள்ள விவரம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது. எனவே விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது அவர் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களின் தகுதிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் அவரது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தால் போதும். கூடுதலான பதிவேற்றம் செய்தால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்கு பிறகு அதற்கான இணையதள பக்கம் செயல்படாது.

அஞ்சல் மற்றும் நேரில் பெறப்படும் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...