மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியை படம் பிடிக்க முயன்ற ஊடகத்தினரை சிதறி ஓட வைத்தனர் போலீஸார். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவி விசாரணைக்காக ஆஜரானார். அப்போது நிர்மலாதேவியை படம் பிடிப்பதற்காக கேமராமேன்கள் காத்திருந்தனர். விசாரணை முடிந்ததும், நிர்மலாதேவி வெளியே வந்து போலீஸ் வாகனத்தில் ஏற முயன்றார்.
அப்போது செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்கள் நிர்மலாதேவியை படம் பிடிக்க முயன்றனர். தொடர்ந்து சலசலப்பு ஏற்படவே, போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் ஊடகத்தினர் வாகனத்தை மறித்துக் கொண்டு, போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் ஊடகத்தினரை நாலாபுறமும் சிதறி ஓடவைத்து விரட்டியடித்தனர் போலீசார். இதில் நக்கீரன் நிருபர் சி.என்.ராமகிருஷ்ணனுக்கு கை முறிந்தது. கை கடிகாரம் உடைந்தது.
சன் டிவி செய்தியாளர் மணிகண்டனுக்கு கை எலும்பு மூட்டு இறங்கிவிட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புகைப்படக்காரர்களின் கேமராக்களும் உடைந்தன.




