செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு – மீனாட்சிபுரம் சாலையில் உள்ள உன்னிமாயா வைத்திய சாலையில் அரிய வகை இரு தலை மணியன் பாம்பு பிடிபட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டாரப்பகுதிகளில் ஏராளமான அரியவகை மூலிகைகளும், அரிய வகை ஊர்வன வகையினங்களும், பறவையினங்களும் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் – பாலோடு பகுதியில் மிகவும் பிரபலமான இயற்கை வைத்தியர் மருத்துவர் உன்னி வைத்தியர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு – மீனாட்சிபுரம் – தேன்பொத்தை ரோட்டில் உன்னிமாயா இயற்கை வைத்தியசாலையை நடத்தி வருகிறார்.
அவருக்கு சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் இன்று மாலை இரு தலைமணியன் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்ட அவர் இது குறித்து செங்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த குற்றாலம் வனச்சரகர் ஆரோக்கியசாமி அறிவுத்தலின்படி, புளியரை வனப்பகுதி எம்.கே. பாறை பீட் வனகாப்பாளர் தங்கராஜ், வனக்காவலர் ஹரிகோபால், வேட்டை தடுப்பு காவலர் கருப்பசாமி ஆகியோர் விரைந்து வந்து அரிய வகையை சார்ந்த இரு தலை மணியன் பாம்பை கைப்பற்றி புளியரை மேற்குத்தொடர்ச்சி மலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
செங்கோட்டை அருகே இரு தலை மணியன் பாம்பு பிடிப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



