
கொடுத்த கடனை வாங்க சென்ற பெண் தீயில் கருகி பலி..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ராமன் புதூரில் கடன் தொகையை கேட்கச் சென்ற இடத்தில் கடனை பெற்ற தங்கம் என்ற பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தபோது கடன் கொடுத்த பெண் தடுக்க முற்பட்டு அவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ராமன் புதூரை சேர்ந்தவர் குமார். ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா. இவர் அந்த பகுதியில் மகளிர் சுய உதவி குழுவில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தங்கம் என்பவருக்கு குழுவின் மூலம் அம்பிகா 4 லட்ச ரூபாய் கடன் வழங்கியுள்ளார்.
கடன் தொகையை பெற்றுக் கொண்ட தங்கம் பணத்தை சிறிது நாட்களுக்குள் தருவதாக கூறியுள்ளார் பணம் வாங்குவதற்காக அம்பிகாவும் பலமுறை தங்கத்தின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்றும்
வழக்கம் போல் தான் கொடுத்த நான்கு லட்ச ரூபாயை வாங்குவதற்காக தங்கத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார் அம்பிகா. அப்போது பணத்தை கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென தங்கம் தனது வீட்டிற்குள் சென்று அங்கிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்டதும் பதறிய அம்பிகா அவரை தடுக்க முயன்றுள்ளார்.
எதிர்பாராத விதமாக மண்ணெண்ணெய் அம்பிகா உடல் மீது பரவியுள்ளது. இதில் தீ மளமளவென அவர் மீது பற்றியுள்ளது. உடலில் தீ பற்றியதும் இருவரும் அலறியடித்து கூச்சலிட்டபடி வீட்டிற்குள் அங்குமிங்கும் ஓடி உள்ளனர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கடன் கேட்க சென்ற அம்பிகா உடல் முழுவதும் தீ பற்றியதால் அவர் சம்பவ துடிதுடித்து பலியானார்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்கத்தை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
கொடுத்த கடனை வாங்க சென்றவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



