
விழுப்புரம் அருகே நடந்த கார் விபத்தில் இருவர் பலி; மேலும் இருவா் படுகாயம் அடைந்தனா்….!
விழுப்புரம் அருகே நடந்த கார் விபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலி…!
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளித்தென்னல் எம்.என்.குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்(வயது 32). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இவர், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் வீரா(27), ரத்தினராஜ் மகன் நாகராஜ்(24), தேசிங்கு மகன் தேவநாதன்(23) ஆகியோருடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு 4 பேரும் ஒரு காரில் சுற்றுலா புறப்பட்டனர்.
கார் விழுப்புரத்துக்கு அருகே வந்தபோது, சுற்றுலா செல்வதற்கு மேலும் கூடுதலாக பணம் தேவைப்படும் என நினைத்த ராஜ், வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்துவரலாம் என்று நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள், மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். காரை வீரா ஓட்டிவந்துள்ளார்.
கார் விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே எல்.ஆர்.பாளையம் என்ற இடத்தில் நள்ளிரவில் சென்றபோது, சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரத்தடிகள் மீது எதிர்பாரத விதமாக கார் மோதியதில் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் வீரா, ராஜ் ஆகிய இருவரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயமடைந்த நாகராஜ், தேவநாதன் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே விபத்து குறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ், வீரா ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான கார் மீட்கப்பட்டு, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



