
குழந்தை வேண்டாம் என சொன்ன புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை..!
திருமணமான 5 மாதத்தில் குழந்தை வேண்டாம் என கூறி மகளிடம் தகராறு செய்த மருமகனை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தலைச்சங்காட்டை சேர்ந்த ராஜாராமன் மகன் சதீஷ்குமார்(30). இவர் அப்பராசபுத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் கலைமதியை(25) காதலித்து வந்தார். சதீஷ்குமார் 10ம் வகுப்பு வரை படித்தவர். ஆனால் கலைமதி எம்எஸ்சி, எம்பில் முடித்துவிட்டு தில்லையாடி பகுதி தனியார் பள்ளியில் வேலைபார்த்து வருகிறார்.
இவர்களது காதல் விஷயம் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து இரு குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். திருமணத்துக்கு முன்பே சதீஷ்குமார், கலைமதி வேலைக்கு போகக்கூடாது என கட்டளையிட்டதுடன் அந்த பள்ளிக்கே சென்று தகராறு செய்துள்ளார்.
இதனால் சதீஷ்குமார் குடும்பத்தினர் திருமணம் நடத்தும் நாட்களை தள்ளி போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கலைமதி வீட்டார் செம்பனார்கோவில் போலீசில் புகார் அளித்தனர்.
அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தலைச்சங்காட்டில் உள்ள சதீஷ்குமார் வீட்டில் வசித்து வந்தனர்.
மழை வி்ட்டும் துாறல் விடவில்லை என்பதை போல திருமணம் முடிந்தாலும் தகராறு முடியவில்லை என்ற நிலையில் திருமணம் ஆனதிலிருந்தே தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
தற்போது குழந்தை வேண்டாம் என சதீஷ்குமார் தகராறு செய்துள்ளார். இவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினரும் இருந்தனர். இதில் விரக்தியடைந்த கலைமதி 20 நாட்களுக்கு முன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்
. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி இருகுடும்பத்தையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுக்கு திருமணமாகி 5 மாதமே ஆனதால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தார்.
அதன் பின்னர் கலைமதி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று மதியம் சதீஷ்குமார் தனது தாய்மாமன் பன்னீரை பார்ப்பதற்கு அப்பராசபுத்தூருக்கு வந்தார்.
அப்போது வழியில் மாமனார் நாகராஜை பார்த்த சதீஷ்குமார் மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், தன்னிடம் இருந்த கத்தியால் சதீஷ்குமாரின் தொடைப்பகுதியில் ஓங்கி குத்தினார். மேலும், அருகில் கிடந்த இரும்பு கம்பியாலும் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சதீஷ்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பொறையார் போலீசார் கொலை வழக்குப் பதிவுசெய்து நாகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



