
இந்து அறநிலையத்துறையில் மெகா முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது்;
தமிழக இந்து அறநிலையத்துறையில் நடந்துள்ள மெகா முறைகேடு தொடர்பாக அதில் தொடர்புடைய அதிகாரிகள் உள்பட 132 பேரை சஸ்பெண்ட் செய்ய கமிஷனர் பணீந்திர ரெட்டி முடிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை முக்கியமான கோயில்கள். இந்த கோயில்களுக்கு என்று அரசர்கள், பக்தர்கள், வணிகர்கள் என பல தரப்பினரும் தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள், வீடு, நிலம் என்று எழுதி வைத்துள்ளனர்
அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலம், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் உள்ளது. இந்த நிலங்கள் மற்றும் கடைகளை வாடகை மற்றும் குத்தகை விடுவதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டப்படுகிறது.
இதை தவிர்த்து கோயில்களில் உண்டியல் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து தான், அந்த கோயில்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு கிடைக்கும் இந்த வருவாயில் கடை நிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அதிகாரிகள் சிலர் சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு விற்றுவிட்டதாகவும் சிலர் குறைந்த குத்தகைக்கு விட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக அறநிலையத்துறை தலைமை அலுவலகத்திற்கு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் ஆணையர் உத்தரவின் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் பேரில் தற்போது வரை இளநிலை உதவியாளர் முதல் இணை ஆணையர் வரை 132 பேர் மீது 17ஏ மற்றும் 17பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் சார்பில் அறிக்கை தயார் செய்து கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், குற்றச்சாட்டுக்கு ஆளான ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை பலர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கும் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இது, அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஊழியர்கள் தங்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்து விடக்கூடாது என்ற பயத்தில் உயரதிகாரிகளை அணுகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அறநிலையத்துறை ஊழியர்கள் கூறும் போது, ‘அறநிலையத்துறையில் 132 பேரில் பலர் மீது முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது விசாரணையின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. தற்போது அவர்கள் மீது கமிஷனர் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.
இனிவரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்’ என கூறினார்.



