
கோவையில் நீதிமன்றம் அருகே இருவரை அரிவாளால் வெட்டிய விவகாரம்: 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
கோவையில் நேற்று பட்டப்பகலில் நீதிமன்றம் அருகே நடந்து சென்ற இருவரை, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை கணபதி காமராஜபுரத்தைச் சேர்ந்த பிரதீப் அடிதடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு தமது நண்பர் தமிழ்வாணனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இருவரும் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரதீப், தமிழ்வாணன் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தியதில், இருசக்கர வாகனத்தில் வந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள்,கணபதி காமராஜபுரத்தைச் சேர்ந்த சதீஷ், தனபால், ஹரி, சூர்யா என்பது தெரியவந்தது.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் காலை முதலே இப்பகுதியில் சுற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
முன்விரோதம் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இரண்டு இளைஞர்களையும் தாக்கிய அந்த மர்மக்கும்பல் தலைமறைவானதாக கூறப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது. .



