
சென்னை அருகே உள்ள திருமங்கலம் அண்ணா நகரில் ஒரு ஆட்டோ டிரைவரிடம் பணம், செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து பைக், பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அண்ணாநகர் அடுத்த திருமங்கலம், பெரியார் நகர், பாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று திருமங்கலம் பகுதியில் சவாரிக்காக ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே பைக்கில் ஒரு இளைஞா் ஒருவர் ஆட்டோ டிரைவர் மணிகண்டனிடம் பட்டாக்கத்தியை காட்டி, அவர் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன், ரூ.500 ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி ஓட முயற்சித்தார்.
இதனால் அதிரச்சியடைந்த மணிகண்டன் சுதாரித்துக்கொண்டு அலறி கூச்சல் போட்டுக்கொண்டு திருடன், திருடன் என கத்திபடி செல்போன் பறித்து பைக்கில் தப்பிய இளைஞரை விரட்டி சென்றார்.
அந்த பைக்கில் தப்பி சென்ற இளைஞரை திருமங்கலம் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அந்த இளைஞரை திருமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்து, குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்த விசாரணையில், அந்த இளைஞர் திருவள்ளூர் மாவட்டம், பாண்டூர், பாப்பாத்தி தெருவை சேர்ந்த மகேஷ்குமார் (19) என்பதும், அது திருட்டு பைக் என்பதும் தெரிய வந்தது.
மேலும், திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் வாசலில் நின்றிருந்த பைக்கை திருடி வந்ததாக மகேஷ்குமார் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பைக், பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இப்புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேஷ்குமாரை கைது செய்து பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
.
பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



