திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் பயங்கர இடி, மின்னல், சூறைகாற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டியை அடுத்த நடுமலையடிபட்டியைச் சேர்ந்தவர் சமுத்திரகனி (வயது 65) விவசாயி. இவருடைய மனைவி மூக்கம்மாள் (60).
இவர் நேற்று தனது தோட்டத்துக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.
அப்போது மாலையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ததால் உடனே மூக்கம்மாள் அங்குள்ள தென்னை மரத்தின் அடியில் மழைக்காக ஒதுங்கி நின்றார்.
அப்போது அந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.
மேலும் தென்னை மரத்தின் அடியில் நின்ற மூக்கம்மாளின் மீதும் மின்னல் தாக்கியது.
இதில் மூக்கம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மாலையில் நீண்ட நேரமாகியும் மூக்கம்மாள் தனது வீட்டுக்கு திரும்பி வராததால், சமுத்திரகனி மற்றும் உறவினர்கள் அவரை தேடிச் சென்றனர்.
அப்போது மூக்கம்மாள் மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்திரை கலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மின்னல் தாக்கி பலியான மூக்கம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னல் தாக்கி பலியான மூக்கம்மாளுக்கு 6 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இதேபோல் கலிங்கப்பட்டி, அடைக்கலாபுரம், ரெங்கசமுத்திரம், ஒத்தக்கடை, மலையடிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.
கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு கடையில் மேற்கூரை சூறைக்காற்றில் பறந்தது. மலையடிப்பட்டி காலனியை சேர்ந்த தங்கசாமி என்பவரின் வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. பின்னர் அவற்றை மின்ஊழியர்கள் சரிசெய்தனர்.
மாடு மேய்க்க சென்ற மூக்கம்மாள் மின்னல் தாக்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



