
புதுவை ரெட்டியார்பாளையத்தில் சிறுமியை திருமணம் செய்து வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி லாம்பர்ட் சரவணன் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). இவர் புதுவை அரசு பொதுப்பணித்துறையில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசித்து வரும் பார்வையற்ற தம்பதியின் மகளான 15 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளதாவும் அதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து சிறுமியிடம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த சில மாதங்களாக நான் வரதட்ணை வாங்காமல் உள்ளை திருமணம் செய்து கொண்டதால் மிகவும் கஷ்டப்படுகிறேன் எனவே உனது பெற்றோரிடம் போய் வரதட்ணை வாங்கி வா எனச்சொல்லி சிறுமியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதுதொடர்பாக புகாரின்பேரில் குழந்தைகள் நல அமைப்பு தலைவர் ராஜேந்திரன், புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவிடம் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவின் உத்தரவின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞர் மணிகண்டனை கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



