தண்ணீருக்காக நடைபெறும் போட்டா போட்டியில், சென்னை பூந்த மல்லி அருகே ஆழ்குழாய் கிணறு அமைத்து இரவு பகலாக ஜெனரேட்டர் போட்டு தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர்களின் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
பூந்தமல்லி அருகே பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், பிடாரிதாங்கல் ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜெனரேட்டர் வசதியுடன் தண்ணீர்த் திருட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு ஏராளமான லாரிகள் தண்ணீர் ஏற்றுவதற்காக அந்தப் பகுதிக்கு வந்துள்ளன. இதை அறிந்த அந்தப் பகுதியினர், தண்ணீர் ஏற்றிச் சென்ற லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரிகள் சிறைப்பிடிப்புப் போராட்டம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து, போலீசார் விரைந்து வந்து லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது இந்தப் பகுதியில் லாரிகளில் தண்ணீர் எடுக்க தடை விதித்திருப்பதாகவும், உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனராம்!




