கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போனதாக அறிவிக்கப் பட்ட முகிலன், நேற்று இரவு திருப்பதி ரயில் நிலையத்தில் அடையாளம் காணப்பட்டு, போலீஸாரால் பிடிக்கப் பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, முகிலன் கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு, அது குறித்த கருத்துகள், வீடியோக்களை பகிர்ந்து வந்தார். இதனால் அவர் காணாமல் போனதாகவும் அவரை அரசு கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இதனை நீதிமன்றம் விசாரித்த போது, அவர் குறித்து தகவல்கள் தங்களுக்குக் கிடைக்கப் பட்டது என்றும், விரைவில் ஆஜர்படுத்துவோம் என்றும் போலீஸார் கூறினர்.
நீதிமன்றத்தின் வடிகாட்டலில் சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக முகிலனை தேடி வந்த நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரால் பிடிக்கப்பட்டு, தமிழக சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப் பட்ட முகிலனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் #SaveMukilan #SaveMugilan என்ற ஹேஷ்டேக்குகள் போட்டு, தங்கள் கருத்துகளை எழுதி வருகின்றனர் சிலர். அதற்கு போட்டியாக, தாடி மீசையுடன் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழ்ந்திருந்த முகிலனின் தாடி மீசையை முதலில் ஷேவ் செய்யுங்கப்பா என்ற ரீதியில் #ShaveMukilan #ShaveMugilan என்ற ஹேஷ் டேக்குகள் பரவலாகி வருகின்றன.



