நள்ளிரவில் ஆயுதங்களுடன் அரை குறை ஆடையுடன் நடமாடிய முகமூடி நபர்கள்! பீதியில் மக்கள்!

கோவை
marma-nabhar

கோவையில் நள்ளிரவு நேரத்தில் கையில் ஆயுதங்களுடன் அரைநிர்வாணமாக முகமூடி அணிந்து சுற்றி திரிந்த மர்ம கும்பலின் சிசிடிவி காட்சிகள் காவல் துறைக்கு கிடைத்துள்ளது.

திரைப்படங்களில் காட்டப்படும் திருடர்களை போல அரை நிர்வாணமாக, வேட்டியை இழுத்துகட்டிக்கொண்டு, முகத்தை முழுவதுமாக மறைத்துக்கொண்டு கோவையின் பல்வேறு பகுதிகளில் மர்ம கும்பல் சுற்றி திரிவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 23-ம் தேதி கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் மேலாடைகள் இன்றி கையில் ஆயுதங்களுடன் மர்ம கும்பல் ஒன்று உலா வந்ததுள்ளது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் அந்த கும்பல் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

மேலாடை இல்லாமல் உலா வந்த அந்த மர்ம நபர்கள் யார் ? என்பது குறித்தும் அதிகாலை நேரத்தில் கையில் ஆயுதங்களுடன் எதற்காக வீடுகளை நோட்டமிட்டவாறு சென்றார்கள் என்பது குறித்தும் சிங்காநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அதே கும்பல் அன்றைய தினமே பீளமேடு குருகார்டன் பகுதியில் சுற்றி திரிந்து இருப்பது அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. 3 நபர்கள் முகத்தை மறைத்துக்கொண்டு தைரியமாக சுற்றி வருவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இந்த கும்பல் என்ன நோக்கத்திற்காக கோவை நகரில் சுற்றி திரிகின்றனர் என்பது குறித்து பீளமேடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்காநல்லூர் பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அப்பகுதியில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தினர்.

இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து சிலரை கைது செய்து சிறையில் அடைந்திருத்தனர். அதே போல் இவர்களும் சந்தனமரம் வெட்டும் கும்பலா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.