
‘தமிழக ஆளுநர் ரவி குறித்து, தி.மு.க., செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி பேசி இருப்பது அருவருப்பானது’ என முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் தீபாவளிக்கு முன் தினம் நடைபெற்ற கார் குண்டு வெடிப்புத் தாக்குதலில், ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இவரது வீட்டில் இருந்து ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ரவி, ‘கோவை சம்பவத்தை காவல் துறையினர் விரைவாக விசாரித்ததை பாராட்டுகிறேன். ஆனால், இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமையான, என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைக்க காலதாமதம் செய்தது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் ரவியின் கருத்து குறித்து ‘டிவி’ சேனல் ஒன்றில் விவகாத நிகழ்ச்சி நடந்தது. இதில், தி.மு.க., செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன், அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கர்னல் தியாகராஜன் கருத்துகளை முன் வைத்தார்.
அப்போது அவர், இந்த விவகாரத்தில் ஒரு மாநிலம் தாண்டிய மற்ற நாடுகளின் விஷயம் இருப்பதால், வழக்கை என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில், ‘லோ இண்டென்சிட்டி’ பொருட்கள் கைப்பற்றப்பட்டது என டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறினார். ஆனால், நைட்ரோ கிளிசரின் உள்ளிட்ட சக்திவாய்ந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, என்.ஐ.ஏ., முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது, ‘லோ இண்டென்சிட்டி பொருட்கள்’ கிடைத்து என, டி.ஜி.பி.,கூறியது ஏன்?’ என, கர்னல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.
இவரை இடை மறித்த ராஜீவ்காந்தி, உங்களை கர்னல் என்கிறீர்கள். நீங்கள் எந்த கர்னல் என தெரியவில்லை. வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அது பற்றி வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது. நீங்கள் ராணுவ நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கூறுவீர்களா? எனக் கேட்டு, நீங்கள் தேச துரோகி’ என, பல முறை கூறினார்.
இதுகுறித்து, கர்னல் தியாகராஜன் கூறியபோது, தி.மு.க., செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தியின் பேச்சு அநாகரிகமானது. ஆளுநர் ரவி குறித்து மிகவும் அவதுாறாகப் பேசினார். ‘ராஜ்பவனில் துாங்கிய ரவி, கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கண் விழித்தபோது தான், அங்கு நடந்த சம்பவம் குறித்து தெரிகிறது. ஆளுநருக்கு சட்டமும் தெரியவில்லை. என்.ஐ.ஏ.,வின் அதிகாரம் குறித்தும் தெரியவில்லை. கோவை சம்பவம் குறித்து பேச ஆளுநருக்கு அருகதையும் இல்லை’ என, அவர் பேசினார். இந்த அருவருப்பு பேச்சு கண்டிக்கத்தக்கது. என்னையும் தேசதுரோகி எனக் குறிப்பிட்டார். இவருக்கு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் எஸ் ஆர் சேகர், இந்தியாவைதுண்டாட செயல்பட்டு தண்டனை அனுபவிக்கும் காஷ்மீர் பயங்கரவாதி யாசின் மாலிக்கை கடலூருக்கு அழைத்து வந்து தமிழகத்தை துண்டாட பேசியது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற எல் டி டி இ ஐ ஆதரிக்கும் திமுகவில் ஒட்டிக்கொண்டது, பிராமணர்களை கொன்று குவியுங்கள் என்று ஒரு இனத்தையே அழிப்பது தவறல்ல எனவும் வெறுப்புணர்வை தூண்டியது… என்று தேசவிரோதம், கொலைகாரர்களின் கூட்டணி, என உறவு கொண்டு நாவில் நரம்பில்லாமல் ராணுவ வீரர்களை கூட தேசவிரோதி என பேசிவரும் திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு அரசும் சட்டமும் தண்டனை கொடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.