திருவனந்தபுரத்திலிருந்து தாம்பரம், ராமேஸ்வரம், கோயமுத்தூருக்கு கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கேரளா மற்றும் தென்மாவட்ட வர்த்தகர்கள் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்திய அளவில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கோவில் பக்தர்கள் அதிக அளவில் சென்று பார்வையிடும் புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு மாத அமாவாசை விடுமுறை தினங்களில் ஆண்டு திருவிழா காலங்களில், இங்கு திருவனந்தபுரம் கொல்லம் கோட்டயம் பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய பரிகாரம் செய்ய அதிகளவில் வருகின்றனர்.
அவர்கள் நலன் கருதி திருவனந்தபுரம் ராமேஸ்வரம் தினசரி ரயில் இயக்க வேண்டும்.மேலும் கேரளா தமிழ்நாடு தென்காசி திருநெல்வேலி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் கோவை பெங்களூர் சென்னை நகரங்களில் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகளவில் படிக்கின்றனர். பலர் இங்கு வேலை செய்து வருகின்றனர்.முந்திரி காப்பி தேயிலை மற்றும் இதர பொருட்கள் வாங்க தொழில் நிமித்தமாக வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் நலன் கருதி திருவனந்தபுரம் கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக தாம்பரம் கோயம்புத்தூர் பெங்களூர்க்கு தினசரி ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுவாக திருவனந்தபுரம் கொல்லம் மாவட்டங்களில் அதிக அளவில் ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் செங்கோட்டையிலிருந்து புனலூர் வரை உள்ள மலை வழிப் பாதையில் ரயில் பயணம் செய்வதில் சுற்றுலா குற்றாலம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென்காசி, கொட்டாரக்கரை, கொல்லம், வர்க்கலா போன்ற ஆன்மீக தலங்கள் இப்பகுதியில் உள்ளன. மேலும் ராஜபாளையம் மிகப்பெரிய வர்த்தக தலமாக விளங்குகிறது. இங்கு காட்டன் நூல் மற்றும் ஆயத்த ஆடைகள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன. அதை வாங்கிச் செல்வதற்கு கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஏராளமான வர்த்தகர்கள் தினமும் ராஜபாளையத்திற்கு வருகின்றனர்.
அது போல் சிவகாசி விருதுநகர் போன்றவையும் மிக முக்கிய வர்த்தக நகரங்களாக உள்ளன. மதுரை மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் கூடலழகர் பெருமாள் கோவில் அழகர் கோவில் போன்ற பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களை பார்வையிடவும் திருமலை நாயக்கர் மஹால் போன்ற சுற்றுலாத் தலங்களை பார்க்கவும் கேரளா கர்நாடக பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
மேலும் பழனி, குற்றாலம், செங்கோட்டை போன்ற முக்கிய இடங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவை, பெங்களூரு, சென்னை பகுதிகளில் அதிக அளவில் படிக்கின்றனர். இவர்களுக்கு போக்குவரத்திற்கு போதிய வசதிகள் இல்லாததால் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் நலன் கருதி திருவனந்தபுரத்திலிருந்து தாம்பரம் கோயம்புத்தூர் பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி ஏற்படுத்தித் தருவது மிக அவசியம்.
தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திருவனந்தபுரம் கொல்லம் எம்பி.,க்கள் கோரிக்கையை கேரள மக்கள் சார்பில் ரயில்வே வாரியத்திடமும் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடமும் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோல் தமிழக எம்பி.,க்களும் புதிய ரயில் இப்பகுதிகளில் இயக்க வலியுறுத்துவது மிக அவசியமாகும்.